பொதுத்தேர்வு திருத்தும் மையங்களில், மின்தடை ஏற்பட்டால், ஜெனரேட்டர்களைப் பயன்படுத்த, எவ்வித தடையும் கிடையாது. ஆசிரியர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் ஏற்படுத்தி தரப்படும் என, பள்ளிக் கல்வித் துறை செயலர் சபீதா தெரிவித்துள்ளார்.
மின் வெட்டு பிரச்னையால், தேர்வின் போது மாணவர்கள் பாதிக்கக் கூடாது என்பதால், ஜெனரேட்டர்களை பயன்படுத்தி, பிளஸ் 2 தேர்வுகள் நடத்தி முடிக்கப்பட்டன. தற்போது, 40க்கும் மேற்பட்ட மையங்களில், விடைத்தாள்கள் திருத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், மின்தடை ஏற்படும் போது, விடைத்தாள்களை திருத்த முடியாமல், ஆசிரியர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
சென்னையில் என்.கே.டி., மேல்நிலைப்பள்ளி, எம்.சி.சி., மேல்நிலைப்பள்ளி மற்றும் அசோக் நகர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய மூன்று மையங்களில், விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடந்து வருகின்றன. இதில், என்.கே.டி., மற்றும் அசோக் நகர் பள்ளியில், போதிய அடிப்படை வசதிகள் இல்லை என, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
சங்க நிர்வாகி புகார்: தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் பொதுச் செயலர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: சென்னையில், இந்த மூன்று மையங்களின் பொறுப்பாளர்களிடமும் நேரில் சென்று, ஆசிரியர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து தர வலியுறுத்தினோம்.
குறிப்பாக, கழிப்பறை மற்றும் குடிநீர் வசதிகள் இல்லை. இந்தப் பிரச்னைகளுக்கு தீர்வு காண, உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். அதே போல், மின் தடை ஏற்படும் நேரத்தில், ஜெனரேட்டர்களை பயன்படுத்திக் கொள்ளவும் அரசு உத்தரவிட வேண்டும். இவ்வாறு பாலகிருஷ்ணன் கூறினார்.
தடை ஏதும் இல்லை: ஆசிரியர்கள் சந்திக்கும் பிரச்னைகள் பற்றி பள்ளிக் கல்வித் துறை செயலர் சபீதா கூறும்போது, "தேர்வின் போது மட்டுமில்லாமல், விடைத்தாள் திருத்தும் மையங்களிலும் ஜெனரேட்டர்களை பயன்படுத்தலாம் என, ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளோம்.
விடைத்தாள் திருத்தும் மையங்களில், ஜெனரேட்டர்களை பயன்படுத்த எவ்வித தடையும் இல்லை. அதேபோல், சென்னையில் உள்ள மையங்களில், போதிய அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தரவும், உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.