Pages

Friday, April 20, 2012

தேர்வுத்துறையில் 50 இடங்களில் கேமரா பொருத்த முடிவு.

தேர்வுத்துறை இயக்குனரகத்தை பாதுகாப்பு மிகுந்த பகுதியாகவும், முக்கிய பணிகள் நடைபெறும் பிரிவுகளில், 50 கேமராக்களை பொருத்தவும் முடிவு செய்யப்பட்டு உள்ளது. இதற்காக, 2.50லட்ச ரூபாய் நிதியும் ஒதுக்கப்பட்டு உள்ளது.
ஆறுவித பணிகள்: திட்டப் பணிகளுக்கான நிதியில் இருந்து, தேர்வுத்துறைக்கு ஒரு கோடியே, நான்கு லட்சத்து, 50 ஆயிரம் ரூபாய் பகிர்ந்து அளிக்கப்பட்டு உள்ளது. இதில், ஆறு விதமான பணிகள் நடைபெற உள்ளன.

இயக்குனரகத்தில், அட்டவணை பதிவேடுகளை டிஜிட்டல் மயமாக்குவதற்கு, 10 லட்ச ரூபாய்; நான்கு புதிய வாகனங்கள்; தேர்வுத்துறை மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் கம்ப்யூட்டர்; இணையதள வசதி மற்றும் இயக்குனர் அலுவலகத்தில் கண்காணிப்பு கேமரா பொருத்துதல் ஆகிய பணிகள் நிறைவேற்றப்பட உள்ளன.
ரூ.2.50 லட்சம் ஒதுக்கீடு: சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில் உள்ள தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில், கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த, 2.50லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து, தேர்வுத்துறை வட்டாரங்கள் கூறியதாவது: இயக்குனர் அலுவலக அறைக்கு பக்கத்தில், பொதுத் தேர்வுக்கான கேள்வித்தாளை இறுதி செய்வது உள்ளிட்ட முக்கியமான பணிகள் நடைபெறும்.
இதில், அதிகாரிகள் மற்றும் ஆசிரியர்கள் ஈடுபடுவர். அப்போது, ஒட்டுமொத்த குழுவினரின் செயல்பாடுகளையும் கண்காணிப்பது சிரமம். எனவே, இந்த இடத்தில் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. இதுதவிர, இயக்குனர் அலுவலகத்தின் பின்புறம் உள்ள மற்றொரு கட்டடத்தில், விடைத்தாள் மற்றும் கேள்வித்தாள் கட்டுகள் பாதுகாக்கப்படுகின்றன. இங்கும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன.
அதேபோல், சான்றிதழ் சரிபார்ப்பு பிரிவிலும் கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன. மொத்தம், 50 இடங்களில், கேமராக்கள் பொருத்தப்படும். அரசாணை வெளியானதும், கேமராக்கள் கொள்முதல் செய்யப்பட்டு, நிறுவும் பணிகள் நடைபெறும். இவ்வாறு, தேர்வுத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
புதிய கட்டடம்: தேர்வுத்துறைக்காக, எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், இரண்டு கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது. தேர்வுகளுக்கான மந்தண கட்டுகள் (கோப்புகள்), மாணவர்களின் மதிப்பெண் விவரங்கள், அட்டவணைப் பதிவேடுகள் ஆகியவற்றை பாதுகாக்க, இந்த புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.
எழும்பூர் மாநில மகளிர் மேல்நிலைப் பள்ளி(அரசுப் பள்ளி), மூன்று ஏக்கருக்கும் அதிகமான இடத்தைக் கொண்ட பெரிய வளாகம். தற்போதைக்கு தரைத்தளம் மற்றும் முதல் தளம் மட்டும் கட்டப்பட உள்ளது. 50 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் இந்த கட்டடம் கட்டப்படும் என கூறப்பட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.