Pages

Monday, April 16, 2012

17 ஆயிரம் மாணவருக்கு லேப்டாப் வழங்க இலக்கு.

"நாமக்கல் மாவட்டத்தில், 17 ஆயிரம் மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது,'' என, விழாவில் தமிழக சுரங்கம் மற்றும் தொழில் துறை அமைச்சர் தங்கமணி பேசினார்.
நாமக்கல் மாவட்டம், ஜே.கே.கே., கல்லூரி, ப.வேலூர் கந்தசாமி கண்டர் கல்லூரி, ராமலிங்கம் அரசு மகளிர் கல்லூரி மற்றும் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரி ஆகியவற்றில் படிக்கும் 2,024 மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது.

நாமக்கல் மாவட்ட கலெக்டர் குமரகுருபரன் தலைமை வகித்தார். டி.ஆர்.ஓ., சீதாலட்சுமி, எம்.எல்.ஏ.,க்கள் பாஸ்கர், தனியரசு, மாவட்ட பஞ்சாயத்து சேர்மன் காந்திமுருகேசன், நகராட்சி சேர்மன் கரிகாலன், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் பழனிவேல் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
தமிழக சுரங்கம் மற்றும் தொழில்துறை அமைச்சர் தங்கமணி, மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்கி பேசியதாவது: தமிழக முதல்வர், கல்வித்துறையை முதன்மை பெற்ற துறையாக மாற்ற வேண்டும் என்பதற்காக, 14 ஆயிரத்து 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். ஏழை, எளிய மாணவர்கள் கல்வி அறிவு பெறவேண்டும் என்பதற்காக இலவச லேப்டாப் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியருக்கு வழங்கப்படுகிறது.
நாமக்கல் மாவட்டத்தில், 17 ஆயிரம் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியருக்கு இலவச லேப்டாப் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது, கல்லூரி மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார். அரசு அலுவலர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கல்லூரி முதல்வர்கள், பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், மாணவ, மாணவியர் உள்பட பலர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.