Pages

Saturday, September 16, 2017

ஆசிரியர் தகுதி படிப்புக்கு பதிவு வரும் 30 வரை அவகாசம் நீடிப்பு

இணையதளம் முடங்கியதால், தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான, தகுதி படிப்புக்கான பதிவுக்கு, வரும், 30ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, எட்டாம்வகுப்பு வரை பாடம் எடுக்கும் ஆசிரியர்கள், அதற்கான ஆசிரியர் தகுதி தேர்வில், கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இதற்கு, 2009 முதல், 2014 வரையும், அடுத்து, 2014 முதல், 2019 வரையும் அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள், கட்டாய கல்வி உரிமை சட்டம்அமலான பின், பணியில் சேர்ந்து இருந்தால், ஆசிரியர் தகுதி தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும்.


இந்நிலையில், தனியார் மெட்ரிக் மற்றும் நர்சரி பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற உத்தரவிடப்பட்டது. ஆனால், பல லட்சம் ஆசிரியர்கள் தேர்வில் பங்கேற்கவில்லை. மத்திய அரசின் உத்தரவுக்கு, தனியார் பள்ளி நிர்வாகத்தினரும் எதிர்ப்பு தெரிவித்தனர்.இதையடுத்து, மத்திய அரசின் தேசிய திறந்தநிலை பள்ளியான, என்.ஐ.ஓ.எஸ்., நிறுவனத்தில், புதிதாக இரண்டு ஆண்டு டிப்ளமா ஆசிரியர் கல்வியியல் படிப்பு துவங்கப்பட்டுள்ளது. தனியார் பள்ளி ஆசிரியர்கள், 2019க்குள் இந்த படிப்பை முடிக்க வேண்டும் என, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

படிப்பில் சேர, www.nios.ac.in என்ற இணையதளத்தில், செப்., 15க்குள் பதிவு செய்ய உத்தரவிடப்பட்டது. நாடு முழுவதும், பல லட்சம் ஆசிரியர்கள் ஒரே நேரத்தில் முயற்சித்ததால், இந்த இணையதளம் முடங்கியது. இதுகுறித்து, என்.ஐ.ஓ.எஸ்.,சுக்கு புகார்கள் வந்ததால், ஆசிரியர் தகுதி படிப்புக்கான பதிவுக்கு, வரும், 30ம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.