இடமாற்றம் வருமோ என அச்சப்படாமல், துணிந்து, அரசின் உத்தரவுகளை பின்பற்றி பணியாற்றுங்கள்' என, பள்ளிக் கல்வி இயக்குனர்களுக்கு, அமைச்சர் செங்கோட்டையன் அறிவுறுத்தி உள்ளார். பள்ளிக் கல்வி அமைச்சராக, செங்கோட்டையன் பொறுப்பேற்றதும், செயலராக இருந்த சபிதாவையும், பின், இயக்குனர்களையும் மாற்றினார்.
ஆலோசனை கூட்டம் : தொடர்ந்து, ஆசிரியர் சங்க நிர்வாகிகளை அழைத்து கருத்து கேட்டு, விடிய விடிய ஆலோசனைக் கூட்டம் நடத்தினார். அதிகாரிகளை அழைத்து கூட்டம் நடத்தி, நேர்மையாக, வெளிப்படைத் தன்மையுடன் பணியாற்ற உத்தரவிட்டார். அதே போல், செயலர் உதயசந்திரனின் புதிய திட்டங்களுக்கு ஊக்கம் அளித்தார். ஐந்து மாதங்களில், பல்வேறு சாதனை அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். அதற்கான பணிகள் நடக்கின்றன.
அதிகாரபூர்வமாக
இந்நிலையில், ஆசிரியர்கள் இடமாற்ற பிரச்னையில், உதயசந்திரனின் அதிகாரம் பறிக்கப்பட்டது. தொடர்ந்து, புதிய பள்ளிக் கல்வி முதன்மை செயலராக, பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டு உள்ளார். அவர், ஆக., 26ல் பொறுப்பேற்றார். நேற்று, அதிகாரபூர்வமாக நிர்வாகப் பணிகளை துவக்கினார். பள்ளிக் கல்விசெயலரின் மாற்றத்தால், கல்வித் துறை உயரதிகாரிகள், தங்களுக்கும் மாற்றம் வருமோ என்ற அச்சத்தில் இருந்தனர். அவர்களை ஊக்குவிக்கும் விதத்தில், கல்வித் துறையின் இயக்குனர்கள் மற்றும் தலைமை அதிகாரிகளுக்கு, ஆலோசனைக் கூட்டம் நடத்தி, பல்வேறு அறிவுரைகளை, செங்கோட்டையன் வழங்கி உள்ளார்.
அறிவுரைகள் என்ன? :
l புதிய பாடத்திட்டத்தை கொண்டு வர, செயலர் உதயசந்திரனுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்
l நிர்வாகப் பணிகள் தொடர்பாக, பள்ளிக் கல்வி முதன்மை செயலர் பிரதீப் யாதவ் அறிவுரைப்படி செயல்பட வேண்டும்
l 'இடமாறுதல் வரும், அரசியல் ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்' என, அதிகாரிகள் அச்சமடைய வேண்டாம். உங்கள்பணிகளை, நேர்மையாக, முதன்மை செயலரும், அமைச்சகமும் கூறியபடி மேற்கொள்ள வேண்டும்
l தற்போதைக்கு, அதிகாரிகள் இடமாற்றம்
என்பது இருக்காது. அதனால், அவரவருக்கு வழங்கப்பட்ட பணிகளை துரிதமாக மேற்கொள்ளலாம்
l யாரும் கோஷ்டியாக செயல்படக் கூடாது. ஆசிரியர்களின் இடமாறுதல், பதவி உயர்வு போன்றவை தொடர்பாக, அமைச்சரவையின் ஆலோசனைப்படி பணிகளை மேற்கொள்ள வேண்டும்
l மாணவர்களின் முன்னேற்றத்துக்கு, அரசு அறிவித்த திட்டங்களில், எந்த சுணக்கமும் காட்டக் கூடாது. இவ்வாறு அறிவுறுத்தியதாக, கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவித்தன.
உறுத்தல் :
அறிவுரைகளால் நிம்மதி அடைந்த அதிகாரிகள் சிலர், 'எங்களுக்கு, 'ரூட் கிளியர்' ஆனது மகிழ்ச்சி தான். இருந்தாலும், ஆசிரியர்களின் இடமாறுதல், பதவி உயர்வு போன்றவற்றில், அமைச்சரவையின் ஆலோசனைப்படி நடக்க வேண்டும் என்று சொன்னது, சற்றே உறுத்தலாக உள்ளது. 'இந்த அறிவுரையே, இவ்விவகாரங்களில் அரசியல் விளையாடும் என்பதை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது' என்றனர்
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.