Pages

Sunday, May 14, 2017

தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்களுடன் தமிழக ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொறுப்பாளர்கள் சந்திப்பும் கோரிக்கைகளுக்கு உடனடி தீர்வு காண்பதில் இயக்குநர் காட்டிய அக்கறையும்.


மதிப்புமிகு தொடக்கக் கல்வி இயக்குநர் சா.கார்மேகம் அவர்களை ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளர் வா.அண்ணாமலை,மாநிலத் தலைவர் அ.வின்சென்ட் பால்ராஜ், பொதுச்செயலாளர் கோ.முருகேசன் ஆகியோர் 12.05.2017 அன்று மாலையில் சந்தித்து 20 அம்ச பொது கோரிக்கைகள், மாறுதல் தொடர்பான ஆலோசனைகள், தனி ஆசிரியர்களுடைய மேல் முறையீட்டு விண்ணப்பங்கள் ஆகியவைகளுக்கு தீர்வு காண கேட்டுக்கொண்டோம். 


இயக்குநர் அவர்கள் ஒரு மணி நேரம் கோரிக்கைகளை ஆழமாக படித்து உணர்வுபூர்வமாக விளக்கங்களை கேட்டறிந்தார். இயக்குநர் அளவில் தீர்வு காண வேண்டிய கோரிக்கைகளை உடனடியாக தீர்வு காண்பதாக தெரிவித்தார்.

உடனடியாக தீர்வு காண்பதாக தெரிவித்த கோரிக்கைகள்.
******************************************
1.உயர்கல்வி தகுதிக்கு பின்னேற்பு அனுமதி...தீர்வுக்காண விண்ணப்பப் படிவங்களை வழங்கி உடனடியாக தீர்வு காணப்படும் என அறிவித்தார்.

2.உயர்க்கல்வி பயில முன்னனுமதி கோரி விண்ணப்பித்தால் ஓரிரு நாள்களிலேயே அதற்கான அனுமதி வழங்கப்படும் என்றும் அதற்கான விரைவு நடவடிக்கை மேற்கொள்வதாகவும் தெரிவித்தார்.

3.நடைபெறவுள்ள ஆசிரியர்கள் பொது மாறுதல் கலந்தாய்வு 100% வெளிப்படைத் தன்மையுடன் நடைபெறும் என்று உறுதியளித்தார்.

4.பணி நிரவல் என்பதில் கட்டாய சூழ்நிலையில் உள்ளோம். மே மாதம் பணி நிரவல் மாறுதல் செய்ததற்கு பின்னர் ஜூன் மாதத்தில் மாணவர்களின் சேர்க்கையினை கூடுதலாக்கி காட்டினால் ஜூலை மாதமே தகுதியான பணியிடங்கள் வழங்கப்படும் என உறுதியளித்தார். 

5.மலை சுழற்சி மாறுதலில் ஓராண்டு பணி விதியினை பார்க்காமல் பணியிட மாறுதல் அளிக்கப்படுமென தெரிவித்தார். மேலும் மாவட்டம் விட்டு மாவட்டம் ஒருவழி மாறுதலில் மலை சுழற்சியில் உள்ளோர் விண்ணப்பித்திருந்தால் மலை பகுதியில் பணிபுரிந்த காலத்தை கணக்கில் எடுத்துக்கொள்ளாமல் அவர் பழைய பள்ளியில் உள்ள காலத்தை கணக்கில் எடுத்துக்கொண்டு மாறுதல் வழங்கப்படும் என்று தெரிவித்தார். 

6.தொடக்கக்கல்வித் துறையில் பின்பற்றப்படும் பதிவுத்தாள் (Record sheet) முறையினை மாற்றி உயர்நிலைப்பள்ளி, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ளதுபோல் மாற்றுச் சான்றிதழ் ( Transfer certificate) முறையினை உடனடியாக செயல்படுத்துவதாக உறுதியளித்தார்.

நீங்கள் அளித்துள்ள கோரிக்கைகளில் சிலவற்றை பள்ளிக்கல்வி மான்ய கோரிக்கையின்போது அறிவிக்க உள்ளோம் என்றும் தெரிவித்தார்.

இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய மாற்றம், புதிய ஓய்வூதியத் திட்டம் ரத்து போன்ற பொது கோரிக்கைகளுக்கு தீர்வு காண பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அவர்களும் பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர் அவர்களும் கவனத்தில் வைத்து இருப்பதாக தெரிவித்தார்.

தொடக்கக் கல்வி இயக்குநர் அவர்கள் தேவையற்ற வகையில் கருத்து சொல்வதை முற்றிலும் தவிர்த்துக்கொண்டார். தொடக்கக்கல்வித் துறை ஆசிரியர்களுக்கு நிறைய செய்ய வேண்டும் என்ற ஆர்வம் அவரிடம் இருப்பதை காணமுடிந்தது. அதே நேரத்தில் ஆசிரியர்கள் தங்கள் கடமையை அலட்சியபடுத்தாமல் அக்கறையுடன் பணியாற்ற வேண்டும் என்பதில் கண்டிப்புடன் இருப்பதை உணர முடிந்தது. ஐபெட்டோ அகில இந்தியச் செயலாளரின் இனிய அணுகுமுறைக்கு அவரும் இனிய அணுகுமுறைகொண்டு அடிக்கடி சந்தித்து பேச வேண்டும் என்று எண்ணுவதை உணர முடிந்தது.

நல்ல பள்ளிக்கல்வித் துறை அமைச்சர், நல்ல பள்ளிக்கல்வித் துறைச் செயலாளர்,நல்ல தொடக்கக் கல்வி இயக்குநர். இவர்களை பயன்படுத்திக்கொண்டு நீண்டகாலமாக உள்ள ஆசிரியர்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்போம். இது ஒரு மகிழ்ச்சியான சந்திப்பு. இந்த சந்திப்பின்போது நாமக்கல் மாவட்டச் செயலாளர் ம.பூபதி உடனிருந்தார்.
வாழ்த்துகளுடன்
அண்ணன் வா.அண்ணாமலை,
அகில இந்தியச் செயலாளர் (ஐபெட்டோ).

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.