Pages

Saturday, May 13, 2017

வேலை வாய்ப்பை உறுதி செய்ய யு.பி.எஸ்.சி., புதிய முயற்சி

தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், போட்டித் தேர்வு எழுதுவோரின் மதிப்பெண் உள்ளிட்ட விபரங்களை ஆன்லைனில் வெளியிட, யு.பி.எஸ்.சி., எனப்படும் மத்திய பணியாளர் தேர்வாணையம் முடிவு செய்துள்ளது.


ஆலோசனை

ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., உள்ளிட்ட பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை, யு.பி.எஸ்.சி., நடத்துகிறது. மத்திய அரசு துறைகளில் உள்ள பணியிடங்களுக்கான போட்டித் தேர்வை, எஸ்.எஸ்.சி., எனப்படும் பணியாளர் தேர்வாணையம் நடத்துகிறது.

’நாடு முழுவதும் உள்ள தகுதியுள்ள மாணவர்கள் குறித்த முழு விபரங்களை அறிந்து கொண்டு, அவர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க, தனியார் நிறுவனங்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும்’ என, பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு விருப்பம் தெரிவித்திருந்தார். 

அதன்படி, ’யு.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களின் மதிப்பெண்கள், கல்வித் தகுதி உள்ளிட்ட விபரங்களை பகிர்ந்து கொள்ளும் வசதியை ஏற்படுத்தலாம்’ என, ’நிடி ஆயோக்’ மத்திய அரசுக்கு ஆலோசனை அளித்திருந்தது. தற்போது இந்த திட்டத்தை, யு.பி.எஸ்.சி., செயல்படுத்துகிறது.

வேலைவாய்ப்பு

இது குறித்து அந்த அமைப்பு வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது: 

யு.பி.எஸ்.சி., நடத்தும் போட்டித் தேர்வுகளை எழுதும் மாணவர்களிடம், அவர்களுடைய தகவல்களை தனியார் நிறுவனங்களுடன் பகிர்ந்து கொள்வதற்கான ஒப்புதல் கேட்கப்படும். 

அவ்வாறு ஒப்புதல் அளிக்கும் மாணவர்கள் பெறும் மதிப்பெண்கள், அவர்களுடைய கல்வித் தகுதி, மொபைல் எண், ’இ - மெயில்’ முகவரி உள்ளிட்டவை, தேசிய தகவல் மையம் பராமரிக்கும், ஒருங்கிணைந்த தகவல் முறையில் சேர்க்கப்படும். 

இதை தனியார் நிறுவனங்களும், தனியார் வேலைவாய்ப்பு நிறுவனங்களும் பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம், தனியார் நிறுவனங்களில் மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பு கிடைப்பதற்கு வழி கிடைக்கும். இவ்வாறு அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.