Pages

Tuesday, May 30, 2017

"நீட்" எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு

எம்பிபிஎஸ் மாணவர் சேர்க்கை குறித்து ஒரு வாரத்தில் தெளிவான முடிவு எடுக்கப்படும் என்று சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள நல வாழ்வு மற்றும் குடும்ப நல பயிற்சி மையத்தில் சுகாதார துறை சார்பில் அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களின் கலந்தாய்வு கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு முன்னதாக சுகாதார துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதார துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கூட்டாக நிருபர்களை சந்தித்து கூறியதாவது:


தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவ கல்லூரிகளில் ஏற்கனவே இருந்ததை விட கூடுதலாக 1000 எம்பிபிஎஸ் சீட்டுகள், முதுநிலையில் 305 எம்டிஎம்எஸ் சீட்டுகள் பெறப்பட்டுள்ளது. இது ஏற்கனவே இருந்த இடங்களை விட 25 சதவீதம் கூடுதல். உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகளில் கூடுதல் கவனம் செலுத்தும்படி அரசு கல்லூரி முதல்வர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நாளை(இன்று) மருந்து சில்லறை விற்பனையாளர்கள் போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ளனர். போராட்டம் நடத்தும் சங்கத்துடன் நடத்திய பேச்சுவார்த்தையில் எங்களுடைய வேண்டுகோளை ஏற்று, மாலை 6 மணி வரை நடக்க இருந்த போராட்டத்தை 4 மணி வரை நடத்துவதாக உறுதியளித்துள்ளனர்.

நீட் தேர்வில் விலக்கு அளிக்க கோரி சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டத்தை வலியுறுத்தி கடிதம் எழுதியுள்ளோம். இதற்கு 2 மத்திய அமைச்சகங்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இதை தொடர்ந்து, நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பூர்வ பதில்கள் மத்திய அமைச்சர்களிடம் அளித்துள்ளோம். 

அவர்கள் கூடுதல் விளக்கம் கேட்டுள்ளனர். அந்த பதில்களும் உறுதியாக அளிக்கப்படும். தொடர்ந்து டெல்லி சென்றும் வலியுறுத்துவோம். மருத்துவ மாணவர் சேர்க்கை உச்ச நீதிமன்றத்தின் வழிகாட்டுதல் படி  ஜூலை 2வது வாரத்தில் கலந்தாய்வு நடக்க வேண்டும். 

எனினும் பல்வேறு பிரச்னைகள் இருப்பதால், மத்திய அரசின் கவனத்துக்கு கொண்டு சென்று அதன் பின்னர் மருத்துவ மாணவர் சேர்க்கை (எம்பிபிஎஸ்) குறித்து ஒரு வாரத்திற்குள் தெளிவான கருத்து வெளியிடப்படும். 

தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பது குறித்த கோப்புகள் தங்களிடம் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனவே, தமிழகத்திற்கு இந்தாண்டுக்குள் எய்ம்ஸ் மருத்துவமனை வரும் என்று நம்பிக்கை   உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.