Pages

Wednesday, May 10, 2017

பழைய பாடத்திட்டத்தை மாற்ற குழு அமைப்பு : கோட்டையில் நாளை முதல் கூட்டம்

தமிழகத்தில், 13 ஆண்டு பழைய பாடத்திட்டத்தை மாற்ற, சி.பி.எஸ்.இ., முன்னாள் அதிகாரிகள் இடம் பெற்ற குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவின் முதல் கூட்டம், சென்னை தலைமை செயலகத்தில், நாளை நடக்கிறது. தமிழகத்தில், தற்போது நடைமுறையில் உள்ள, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 2003ல் தயாரிக்கப்பட்டு,


2006 முதல் அமலில் உள்ளது. 13 ஆண்டுகளை தாண்டிய இந்த பாடத்திட்டத்தால், தமிழக மாணவர்கள், மற்ற மாநில மாணவர்களுடன் போட்டியிட்டு, தேசிய தேர்வுகளில் பங்கேற்க முடியவில்லை. எதிர்காலத்தில் தேசிய, சர்வதேச அளவில், மற்ற மாணவர்களுக்கு ஈடு கொடுக்கும் வகையில், தமிழக பாடத்திட்டத்தை மாற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து, நமது நாளிதழில் பலமுறை செய்திகள் வெளியாகின. பள்ளிக்கல்வி அமைச்சராக செங்கோட்டையன் பொறுப்பேற்றதும், அவரிடம் பாடத்திட்டத்தை மாற்றும்படி, ஆசிரியர் சங்கத்தினரும், கல்வியாளர்களும் மனு அளித்தனர். எனவே, பாடத்திட்டத்தை மாற்ற, பள்ளிக்கல்வி செயலர் உதயசந்திரன் மேற்பார்வையில், சிறப்பு ஆலோசனை குழு அமைக்கப்பட்டு உள்ளது.

இதில், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ.,யின் முன்னாள் இயக்குனர், ஜி.பாலசுப்ரமணியன், அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தர் பாலகுருசாமி மற்றும் கல்வியாளர்கள் இடம் பெற்றுள்ளனர். பாடத்திட்டத்தை மாற்ற நியமிக்கப்பட்டுள்ள, இந்த குழுவின் முதல் கூட்டம், நாளை, தலைமை செயலகத்தில் நடக்க உள்ளது. இதில், அமைச்சர், செயலர் மற்றும் பள்ளிக்கல்வி அதிகாரிகள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், பாடத்திட்டத்தை எப்படி மாற்றுவது, எத்தனை ஆண்டுகளுக்கு ஒருமுறை புதுப்பிப்பது, புதிய பாடத்திட்டத்தை கற்பிக்க, ஆசிரியர்களுக்கு எந்தவித பயிற்சிகள் தேவை என்பதுகுறித்தும், ஆலோசிக்கப்பட உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.