Pages

Thursday, May 18, 2017

அரசு பள்ளிகளை தனியார் நிறுவனங்கள் தத்தெடுக்கும் : 3 ஆண்டில் பாடத்திட்டம் மாற்றம்

''கழிப்பறை மற்றும் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வசதிகளுக்காக அரசு பள்ளிகளை, தனியார் கல்வி நிறுவனங்கள் தத்தெடுக்கும்,'' என, பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அறிவித்து உள்ளார். பள்ளிக் கல்வியில் முன்னேற்றங்கள் கொண்டு வருவது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளான, சி.இ.ஓ.,க்களுக்கு அறிவுரை வழங்கும் கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது. இதில், அமைச்சர் செங்கோட்டையன், செயலர் உதயசந்திரன், பள்ளிக்கல்வி இயக்குனர் இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


இதில், அமைச்சர் பேசியதாவது: பள்ளிகளுக்கு நலத்திட்ட உதவிகள், அரசின் போக்குவரத்து செலவில் வழங்கப்படும். கழிப்பறை கட்டுதல், பராமரித்தல், சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் வழங்குதல் போன்ற வசதிகளை செய்து தர, அரசு பள்ளிகளை, 17 ஆயிரம் தனியார் கல்வி நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் தத்தெடுக்க உள்ளன. உள் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் நிறுவனங்களுக்கு, நற்சான்றிதழ் வழங்கப்படும். தமிழக மாணவர்கள், 'நீட்' போன்ற தேர்வுகளில், மற்ற மாநிலத்துடன் போட்டியிட முடியவில்லை. எனவே, பிளஸ் 1க்கு பொது தேர்வு வருகிறது. அதை அமல்படுத்த, அதிகாரிகள் ஒத்துழைக்க வேண்டும். மேலும், 12 ஆண்டுகளாக, பாடத்திட்டம் மாற்றப்படவில்லை. இதுகுறித்து, கல்வியாளர்களிடம் கருத்து கேட்டுள்ளோம்; மூன்று ஆண்டுகளில், பாடத்திட்டங்கள் மாற்றப்படும்.தனியார் பள்ளிகளுக்கு நிகராக, பள்ளி நுாலகங்கள் விரிவுபடுத்தப்படும். ஒவ்வொரு வகுப்பிலும், விளையாட்டு பிரிவுக்கு உரிய முக்கியத்துவம் தரப்படும். சி.பி.எஸ்.இ.,க்கு மாறும் பள்ளிகளுக்கு, தடையில்லா சான்று வெளிப்படையாக வழங்கப்படுகிறது. இதில், முறைகேடு இருக்கக்கூடாது.மாணவர் எண்ணிக்கையை அதிகரித்தல், யோகா பயிற்சி அளித்தல், தேர்வுகளில் அதிக மதிப்பெண் பெற வைக்கவும், புதிய திட்டங்கள் வர உள்ளன. அரசு ஒதுக்கிய, 26 ஆயிரத்து, 913 கோடி ரூபாயை எப்படி செயல்படுத்த வேண்டும் என, பட்டியல் வழங்கப்படும். இவ்வாறு அவர் பேசினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.