Pages

Thursday, April 27, 2017

கட்டாய கல்வி சட்டத்தை செயல்படுத்துவது எப்படி?

’இன்ஜி., மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கை போல், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழும், மாணவர்களுக்கு சேர்க்கை நடத்தி, அதன் பட்டியலை இணையதளத்தில் வெளிப்படையாக வெளியிட, அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என, கோரிக்கை எழுந்துள்ளது.


ஆறு முதல் 14 வயது வரையிலான ஏழை மாணவர்களுக்கு, அவர்கள் வீட்டின் அருகில் இருக்கும் பள்ளியில், இலவச அட்மிஷன் வழங்க வேண்டும் என்கிறது, கட்டாய கல்வி உரிமைச் சட்டம். 

நேர்மையாகவும், ஏழை மாணவர்களுக்கு பயனுள்ள வகையிலும் இந்த சட்டத்தை பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்து, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளார், ம.தி.மு.க., மாநில இளைஞரணி செயலாளர் ஈஸ்வரன். 

அவர் கூறியதாவது

இணையதளம் வாயிலாக விண்ணப்பம் அளிக்கும் நடைமுறை, இந்த சட்டத்தை நியாயமாக பின்பற்ற வேண்டும் என விரும்பியவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி. 

இதன் தொடர்ச்சியாக, இன்ஜி., மருத்துவ படிப்புகளைப் போல், கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ், பள்ளிகளில் மாணவர் சேர்க்கையையும் நடத்த வேண்டும். சேர்க்கை பட்டியலை அரசே, பள்ளிகளுக்கு அனுப்ப வேண்டும்.

வசிப்பிட தொலைவு குறித்து, தெளிவான அறிவிப்பு வழங்க வேண்டும். பள்ளியில் இருந்து ஒரு கி.மீ., துாரத்தில் வசிக்கும் மாணவர்களால், மொத்த இலவச இடங்களையும் நிரப்ப முடியாத பட்சத்தில், வசிப்பிட தொலைவை அதிகரித்து, மாணவர்களை சேர்த்துக் கொள்ளும் அறிவிப்பை வெளியிட வேண்டும்.

வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினருக்கும், நலிந்த பிரிவினருக்கும் சமவாய்ப்பு வழங்கப்படுவதால், வாய்ப்பு மறுக்கப்பட்ட அனைவருக்கும், வருமான வரம்பு தேவையில்லை என, அரசு முடிவு செய்திருப்பதாலும், வசதியுள்ள பலர் இலவச இடம் பெறும் வாய்ப்புள்ளது.

ஆகவே, துப்புரவுத் தொழிலாளர்கள், ஊனமுற்றோர் போன்ற சிறப்பு பிரிவினரைத் தவிர, மற்ற அனைவருக்கும் வருமான வரம்பு நிர்ணயிக்க வேண்டும். அரசு இணையதளத்தில் அறிவித்துள்ள பட்டியலில், எந்தெந்த பள்ளிகளில் எந்த தேதியில், எத்தனை மணிக்கு, எந்த அதிகாரிகள் முன்னிலையில், குலுக்கல் நடைபெறும் என்பதை, உடனடியாக அறிவிக்க வேண்டும். 

தேர்வு செய்த மாணவர்களின் பட்டியல், பள்ளியில் இருந்து அவர்களின் வீடு அமைந்திருக்கும் துாரம், முகவரி, வருமான விபரங்களையும் இணையதளத்தில் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதற்கான காரணத்தையும் வெளியிட வேண்டும்.

சி.பி.எஸ்.இ.,- ஐ.சி.எஸ்.இ., உள்ளிட்ட அனைத்து விதமான பள்ளிகளிலும், இத்திட்டம் வாயிலாக அரசே சேர்க்கை நடத்தி, பட்டியலை வெளியிட வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.
திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க, மே 18 இறுதி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்னும் இருபது நாட்களே உள்ளதால், சேர்க்கை புரிய சேவையான சான்றிதழ்களை தாமதமில்லாமல் வழங்க, தாசில்தார்களுக்கு உத்தரவிடுமாறு, மாவட்ட கலெக்டருக்கும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.