Pages

Wednesday, April 12, 2017

நீட் தேர்வு; தமிழக மாணவர்கள் வெளிமாநிலங்களுக்கு படையெடுப்பு

நீட் தேர்வுக்கான பயிற்சி பெற, தமிழகத்தில் இருந்து, ஏராளமான மாணவ, மாணவியர், வெளிமாநிலங்களுக்கு படையெடுக்கின்றனர். இந்தியா முழுவதும் மருத்துவ கல்வி படிக்க, நீட் தேர்வு அவசியம் என, மத்திய அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. அப்போது, விதிவிலக்கு பெற்ற தமிழக அரசு, நடப்பாண்டும், நீட் தேர்வு வராது என, கூறியது. 


சட்ட மசோதாவுக்கு, மத்திய அரசு ஒப்புதல் வழங்காத நிலையில், நீட் தேர்வு நெருங்கிய சமயத்தில், தமிழக அரசும் கைவிரித்தது. இதனால், தமிழக மாணவர்கள் நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, மருத்துவ கல்வியில் சேர முடியும் என்ற நிலை உருவாகியுள்ளது. 

நடப்பு கல்வியாண்டில், தமிழகத்தில் இருந்து, 90 ஆயிரம் பேர் நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். அதில், பெரும்பாலானோர் பயிற்சி பெற, கேரளா மாநிலம், திருச்சூர், ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களில் உள்ள மையங்களை நாடிவருகின்றனர்.

இதுகுறித்து பெற்றோர் சிலர் கூறியதாவது

தமிழகத்தில், நீட் தேர்வுக்கு பலரும் பயிற்சி அளிக்கின்றனர். ஆனால், அதில் அவர்களுக்கு போதிய முன் அனுபவம் இருப்பதில்லை. கேரளா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் உள்ள பயிற்சி மையங்கள், பல ஆண்டுகளாக நீட் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தி அனுப்பிவருகின்றன. 

இதனால், அங்கு பயிற்சி பெற்றால், நீட் தேர்வில் தேர்ச்சி பெற முடியும் என்ற நம்பிக்கையில், பலரும் லட்சம் ரூபாய்க்கு மேல் செலவழித்து, அனுப்பி வைக்கிறோம். அங்கு சென்ற பலர், தங்களுக்கு பாடம் புரிவதில்லை என, திரும்பி வருவது பரிதாபம் தான். 

நம் மாநில பாடத்திட்டத்துக்கும், நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்துக்கும் வேறுபாடு அதிக அளவில் உள்ளது. அவற்றை களைய, நம் மாநில பாடத்திட்டத்தை மாற்றியமைக்க, தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.