Pages

Thursday, April 20, 2017

பல்கலைகளில் பணி நியமனங்களுக்கு தடை; ’துடிக்கும்’ துணைவேந்தர்கள்!

தமிழகத்தில் அரசு பல்கலைகள், கல்லுாரிகளில் ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அல்லாத பணியிட நியமனங்களுக்கு திடீர் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் துணைவேந்தர்கள், புதிதாக துணைவேந்தர் பதவிகளை கைப்பற்ற முயற்சிப்பவர் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். தமிழகத்தில் 24 அரசு பல்கலைகள், அரசு மற்றும் உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் மற்றும் பொறியியல் என 2500க்கும் மேற்பட்ட கல்லுாரிகள் உள்ளன. 


இப்பல்கலை, கல்லுாரிகளில் 12.4.2017க்கு பின் ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியிடங்களை நிரப்ப தடை விதித்து செயலர் சுனில் பாலிவல் உத்தரவிட்டுள்ளார்.அந்த உத்தரவில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலையில் 1031 உபரி ஆசிரியர்கள், 4722 உபரி ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் உள்ளனர். 

இவர்களில் முறையே 545 ஆசிரியர் மற்றும் 2643 ஆசிரியர் அல்லாதவர்களை தமிழகம் முழுவதும் உள்ள பல்கலை, அரசு மற்றும் உதவி பெறும் கல்லுாரிகள், பாலிடெக்னிக்களில் பணியிட மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நடவடிக்கை முடியும் வரை எவ்வித பணியிடங்களையும் நிரப்பக் கூடாது, என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்வியாளர்கள் கூறியதாவது:பல்கலைகளில் துணைவேந்தர் நினைத்தால் பைனான்ஸ் கமிட்டி, சிண்டிகேட் என ஒப்புதல் பெற்று, காலியிடங்களை நிரப்பிக்கொள்கின்றனர். 
இதன் பின்னணியில் லட்சக்கணக்கில் பேரம் நடப்பது மறைமுகமாக இருக்கும். 

பல்கலைகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட்ட பின் தான், செயலாளர் கவனத்திற்கு செல்கிறது. மேலும் பல பல்கலைகளில், கோடிக் கணக்கில் பணத்தை கொட்டிய பின் தான் ’துணைவேந்தர் பதவி’யே பிடித்து உள்ளனர்.

’ஒரு பல்கலை துணைவேந்தர் பணியிடம் காலியாக இருக்கும் பட்சத்தில், அங்கு எத்தனை பணியிடங்கள் காலியாக உள்ளன என்பதற்கு ஏற்ப, அப்பல்கலைக்கான புதிய துணைவேந்தர் பதவிக்கு விலை நிர்ணயிக்கப்படும்,’ என்பது உயர்கல்வியில் எழுதப்படாத விதியாக உள்ளது.

துணைவேந்தர் பதவிக்கு போட்டி அதிகரிப்பதே, இதுபோன்ற காலி பணியிடங்களை நிரப்பி ’கல்லா’ கட்டிக்கொள்ளலாம் என்ற வழி இருப்பதால் தான்! செயலர் சுனில்பாலிவலின் இந்த உத்தரவு, பல துணைவேந்தர்களுக்கு கையை கட்டிப் போட்டது போல் உள்ளது.

போட்டி குறையும்:

தற்போது மதுரை காமராஜ், சென்னை மற்றும் சென்னை அண்ணா பல்கலைகளுக்கு புதிய துணைவேந்தர்கள் தேர்வுப் பணிகள் நடக்கின்றன. மூன்றிலும் புதிய துணைவேந்தர் பதவியை பிடிக்க கடும் போட்டி ஏற்பட்டுஉள்ளது. 

செயலாளரின் இந்த உத்தரவு, ’பண பலத்தால் பதவியை பிடித்துவிடலாம் என கனவில் இருப்பவர்களுக்கு இடியாக மாறியுள்ளது’. சிலர் பின்வாங்க வாய்ப்புள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.