Pages

Thursday, March 9, 2017

நீட் தேர்வு தமிழகத்திற்கு விலக்கு : அமைச்சர் உறுதி?

நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்களிக்க வேண்டும் என்று, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன், சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் ஆகியோர் நேற்று சந்தித்துப் பேசினர்.

தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் மத்திய அமைச்சரை சந்தித்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறுகையில், "இந்த மசோதா மனிதவள மேம்பாடு, மருத்துவ நலம், சட்டம் மற்றும் நீதி ஆகிய துறைகள் சம்பந்தப்பட்டுள்ளது. நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக்கோரி ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட மசோதாக்கள் மத்திய அரசின் மூலம் குடியரசுத் தலைவர் ஒப்புதலுக்காகக் காத்திருக்கின்றன. இன்று தமிழக முதல்வர் அனுமதியுடன் நானும், உயர் கல்வித்துறை அமைச்சரும் அரசு செயலாளர்களுடன் மத்திய அமைச்சரை சந்தித்தோம். அவரிடம் தமிழகத்திற்கு விலக்கு வேண்டி எடுத்துரைத்து வலியுறுத்தினோம். இதைப் பரிசீலனை செய்வதாக மத்திய அமைச்சர் எங்களிடம் உறுதி அளித்துள்ளார்’ எனத் தெரிவித்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த விஜயபாஸ்கர் கூறுகையில், "அரசு மருத்துவக் கல்லூரிகளின் சேர்க்கைக்கு மட்டுமே இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதை எதிர்த்து சட்டரீதியான எங்கள் போராட்டம் தொடர்கிறது. அதே நேரத்தில் நாங்கள் மத்திய அரசையும் வலியுறுத்தி வருகிறோம்" என்றார்.

மருத்துவத்தைப்போல், பொறியியல் கல்விக்கும் பொது நுழைவுத்தேர்வை அறிமுகப்படுத்த மத்திய அரசு முயன்று வருகிறது. அதற்கும் தமிழகத்திற்கு விலக்களிக்க தமிழக அமைச்சர்கள் மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகரை வலியுறுத்தியுள்ளனர். இதுகுறித்து உயர் கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறுகையில், "ஏற்கனவே அண்ணா பல்கலைக்கழகம் மூலமாக நுழைவுத்தேர்வை நடத்தி தமிழகத்தின் பொறியியல் கல்விக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள். இதை அமைச்சரிடம் எடுத்துக் கூறி எங்களுக்கு மற்றொரு நுழைவுத்தேர்வு தேவை இல்லை என வலியுறுத்தி உள்ளோம். இதையும் அவர் பரிசீலனை செய்வதாக உறுதி அளித்தார்" எனத் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.