Pages

Thursday, March 2, 2017

பள்ளி பாடத்திட்டங்களில் மாற்றம்?

”பள்ளி பாடத் திட்டங்களை மாற்றி அமைப்பது தொடர்பான அறிவிப்பு, ஒரு வாரத்தில் வெளியாகும்,” என, பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார்.


அவர் அளித்த பேட்டி

அரசு பொதுத் தேர்வு எழுத உள்ள, மாணவ, மாணவியருக்கு வாழ்த்துகள். மாணவர்கள், நம்பிக்கையோடும், தளராத மனதோடும், தேர்வை எதிர்கொள்ள வேண்டும். கல்வியிலும், சமூக விழிப்புணர்ச்சியிலும், தமிழகம் முதல் மாநிலமாக வருவதற்கு, ஜெ., காட்டிய நல்வழியில், அரசு பாடுபடும். 

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவ, மாணவியர், எதிர்காலத்தில் என்ன படிக்கலாம் என்பதை அறிந்து கொள்ள, ’கேரியர் கைடன்ஸ் கவுன்சிலிங்’ என்ற பெயரில், வழிகாட்டி நிகழ்ச்சி நடத்த உள்ளோம். 

இந்நிகழ்ச்சியில், பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்கள், மேற்கொண்டு என்ன படிக்கலாம் என, ஆலோசனை வழங்கப்படும். 32 மாவட்டத் தலைநகரங்கள்; 124 நகராட்சிகள்; 385 ஊராட்சி ஒன்றியங்கள் என, 541 இடங்களில் வழிகாட்டி நிகழ்ச்சி நடத்தப்படும்.

தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களுடன் இணைந்து, இதற்கான ஏற்பாடுகள் செய்யப்படும். நிகழ்ச்சிக்கு வரும் மாணவர்களுக்கு, உணவு, குடிநீர் வசதி செய்து தரப்படும். ஏப்., 6, 7 ஆகிய நாட்களில், ஏதேனும் ஒரு நாளில் நிகழ்ச்சி நடத்தப்படும்.

மருத்துவம், பொறியியல், அறிவியல் பிரிவுகள் குறித்தும், போட்டித்தேர்வு குறித்தும், மாநில கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் சார்பில், ஆலோசனைகள் வழங்கப்படும். அரசை பொறுத்தவரை, மற்ற மாநிலங்களுக்கு முன்னோடியாக, தமிழகம் திகழ வேண்டும் என்பதற்காக, ஜெ., ஆட்சியில் சிறப்பான முறையில், பல்வேறு திட்டங்களை அறிவித்தோம். 

தமிழகம், கல்வித் துறையில், இந்தியாவில் முதன் மாநிலமாக திகழ்வதற்காக, புதிய திட்டங்களை அறிவித்துள்ளோம். பாடத்திட்டங்களை மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. ஒரு வாரத்திற்குள் அறிவிப்பு வெளியாகும். தேர்வுத் துறையில் காலியிடங்களை நிரப்புவது குறித்து, பரிசீலனை செய்யப்படும். 

மாணவ, மாணவியர் எதிர்காலத்திற்காக, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கிறோம். ஆசிரியர், ஆசிரியர் அல்லாத பணியாளர்களின் பணியிடங்கள், நிதி நிலைக்கேற்ப நிரப்பப்படும்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.