Pages

Wednesday, March 8, 2017

கல்விக் கட்டணக்குழு தலைவர் நியமனம் தாமதம்!

தமிழ்நாடு தனியார் பள்ளி கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவரை உறுதியளித்தபடி நியமிக்காததால், அரசுக்கு எதிராக தாக்கலான அவமதிப்பு வழக்கில் உரிய அதிகாரிகளை எதிர்மனுதாரர்களாக இணைக்க உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.


மதுரை ஆண்டாள்புரம் கார்த்தி தாக்கல் செய்த மனு: தமிழ்நாடு தனியார் பள்ளிகள் கல்விக் கட்டண நிர்ணயக்குழு தலைவர் பதவி காலியாக உள்ளது. சென்னையில் அதன் அலுவலகம் ஆறு மாதங்களாக பூட்டிய நிலையில் உள்ளது என தினமலர் நாளிதழில் 2016 ஜூன் 17ல் செய்தி வெளியானது.

தமிழகத்தில் 12 ஆயிரம் மெட்ரிக், நர்சரி, ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் உள்ளன. கட்டண நிர்ணயக்குழு தலைவர் பதவி காலியாக உள்ளதால் 2016--17க்கு கல்விக் கட்டணம் நிர்ணயிக்கப்படவில்லை. 

தனியார் பள்ளிகள் 

தன்னிச்சையாக கட்டணம் வசூலிக்கின்றன. தலைவரை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என உயர்நீதிமன்றத்தில் மனு செய்தேன். 

2016 அக்.,3ல் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர், ’தலைவரை நியமிப்பது தொடர்பாக இறுதி முடிவெடுக்க, மேலும் 4 வாரங்கள் அவகாசம் தேவை’ என்றார். இதை பதிவு செய்த நீதிபதிகள் வழக்கை பைசல் செய்தனர். இதுவரை தலைவரை நியமிக்கவில்லை.

பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலர் சபிதா (நேற்றுமுன்தினம் இடமாற்றப்பட்டார்), மெட்ரிக் பள்ளிகளின் இயக்குனர் பிச்சை மீது நீதிமன்ற அவமதிப்பின் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனு செய்தார். 

நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் கொண்ட அமர்வு, ’தற்போது பல்வேறு துறைகளைச் சார்ந்த ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாறுதல் செய்யப்பட்டுஉள்ளனர். 

எனவே, இவ்வழக்கில் உரிய அதிகாரிகளை எதிர்மனுதாரர்களை, மனுதாரர் இணைக்க வேண்டும். விசாரணை மார்ச் 14க்கு ஒத்திவைக்கப்படுகிறது,’ என உத்தரவிட்டது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.