அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க, கோடை விடுமுறைக்கு முன்பே விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள கல்வித்துறை எவ்வித வழிகாட்டுதலும் வழங்கவில்லை. இதனால், வரும் கல்வியாண்டில் மாணவர் எண்ணிக்கை குறையும் சூழல் உருவாகியுள்ளது. உடுமலையில், 98 அரசு துவக்க பள்ளிகளும், 22 நடுநிலைப்பள்ளிகளும், குடிமங்கலத்தில் 45 துவக்கம், 12 நடுநிலை, மடத்துக்குளத்தில் 43 துவக்கம் மற்றும் 12 நடு நிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளில் ஒரே மாதிரியான மாணவர் எண்ணிக்கை இருப்பதில்லை.
சில துவக்கப்பள்ளிகளில், இருநுாறுக்கும் அதிகமானவர்களும், சில நடுநிலைப்பள்ளிகளில், நுாற்றுக்கும் குறைவான மாணவர்கள் படிப்பதே இப்போதைய பள்ளிகளின் நிலையாக உள்ளது.
பள்ளியின் கட்டமைப்பு, ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு தரம் உயர்த்தப்படுவது, அரசின் சார்பில் வழங்கப் படும் பல்வேறு பயிற் சிகள் என அனைத்துக்குமே மாணவர் எண்ணிக் கை முக்கிய காரணியாக உள்ளது.
மேலும், மாணவர் எண்ணிக்கை குறையும் பள்ளிகளில் ஆசிரியர்களின் எண்ணிக்கையும் குறைகிறது. ஒவ்வொரு கல்வியாண்டின் இறுதியிலும், பள்ளிகளின் நிலையை தீர்மானிப்பதும் மாணவர் எண்ணிக்கை தான்.
கடந்த மூன்றாண்டுகளாகவே துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில், எண்ணிக்கையை அதிகரிக்க, கல்வியாண்டின் இறுதியிலிருந்தே, பள்ளிகளின் செயல்பாடுகளை அட்டவணையிட்டு வினியோகிப்பது, பள்ளியிலுள்ள அடிப்படை மற்றும் இதர வசதிகள் குறித்து நோட்டீஸ் அச்சடித்து பொதுமக்களுக்கு, பள்ளி நிர்வாகத்தினர் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
இதனால், குறைந்த விகிதத்திலாவது அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்தது. இவ்வாறு மாணவர் எண்ணிக்கை அதிகரிக்க, பள்ளி நிர்வாகத்தினரின் செயல்பாடுகள் கடந்தாண்டு முதல் குறைந்துள்ளது.
வழக்கமாக, மார்ச், இறுதி ஏப்., முதல் வாரம் முதல், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் துவக்கப்படுகிறது. ஆனால், நடப்பாண்டில், இதுவரை, மாணவர் எண்ணிக்கை குறைவாக உள்ள பள்ளிகளில் சேர்க்கைக்கான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எதுவும் நடக்கவில்லை.
கடந்த மூன்றாண்டுகளில் உடுமலை, சுற்றுப்பகுதி அங்கன்வாடிகளில் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், அங்கன்வாடி குழந்தைகளின் எண்ணிக்கை முழுமையாக அரசுப்பள்ளிகளுக்கு வருவதில்லை.
விழிப்புணர்வு நடவடிக்கைகளும் இல்லாததால், வரும் கல்வியாண்டில் மாணவர் எண்ணிக்கை சரியும் நிலை உருவாகியுள்ளது.
ஆசிரியர்கள் கூறியதாவது: கடந்த நான்கு ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, அரசு பள்ளிகளில் அடிப் படை வசதிகள் மட்டுமே பெற்றோரின் எதிர்பார்ப்பாக இருந்தது.
ஆனால், வீதிக்கொரு தனியார் பள்ளி என, துவக்கப்பட்டதும், பள்ளியிலுள்ள வசதிகள், மற்றும் கற்பிக்கும் திறன்கள், இணை செயல்பாடுகள் என அனைத்துமே ஒரு பள்ளிக்கான முழுமையான தேவை என்றாகிவிட்டது.
அதில், பொதுமக்கள் மற்றும் தன்னார்வலர்களின் உதவி கிடைக்கும் பள்ளிகள், கட்டமைப்பு உட்பட அனைத்திலும் முன்னேற்றமடைகின்றன.
ஆனால், எந்த உதவியும் கிடைக்காமலும், சேர்க்கையை அதிகரிக்க அறிவுறுத்தும் அரசும் அதற்கான தேவைகளை பூர்த்தி செய்யாமல் விடுவதால், அரசு பள்ளி நிர்வாகங்களும், சேர்க்கைக்கான விழிப்புணர்வில் ஈடுபட முடிவதில்லை.
இது தலைமையாசிரியர் மற்றும் ஆசிரியர்களை விரக்தி நிலைக்கு தள்ளியுள்ளது. இவ்வாறு, ஆசிரியர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.