Pages

Tuesday, March 28, 2017

துணைவேந்தர் பதவிக்கு ’வெயிட்டேஜ்’ மதிப்பெண்

பல்கலைகளின் துணை வேந்தர் பதவிக்கான தேர்வு பணியில், பேராசிரியர்களுக்கு, ’வெயிட்டேஜ்’ மதிப்பெண் வழங்கும் நடைமுறை கொண்டு வரப்பட்டு உள்ளது. தகுதியில்லாதவர்கள், பல்கலைகளின் உயர் பதவிக்கு வருவதை தடுக்க, இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை, மதுரை மற்றும் அண்ணா பல்கலைகளில், துணை வேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. 


இதில், தகுதியானவர்களை நியமிக்க, தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டன.சென்னை பல்கலைக்கு, ஊழல் கண்காணிப்பு துறையின் ஓய்வு பெற்ற கமிஷனர், வேதநாராயணன் தலைமையிலும்; மதுரை பல்கலைக்கு, சென்னை பல்கலையின் முன்னாள் பொருளியல் பேராசிரியர் முருகதாஸ் தலைமையிலும், தேடல் குழுக்கள் அமைக்கப்பட்டன. 

இறுதி பட்டியல்

இந்த குழுக்கள், ஆமை வேகத்தில் செயல்படுவதாக புகார் எழுந்தது. ஆனால், இரு குழுக்களும், முறைகேடான நியமனங்களை தடுக்க, ’வெயிட்டேஜ்’ மதிப்பெண் முறையில், ஆட்களை தேர்வு செய்துள்ளன. 

சென்னை பல்கலைக்கு, இறுதி பட்டியல் தயார் செய்யப்பட்டு, கவர்னரிடம் வழங்கப்பட்டுள்ளது. மதுரை காமராஜர் பல்கலை துணை வேந்தர் தேர்வுக்கான, இறுதி பட்டியல் தயார் செய்யப்படுகிறது. 160 பேர் விண்ணப்பித்ததில், 75 பேர் மட்டுமே தகுதி பெற்றுள்ளனர். 

14 அம்சங்கள்

அவற்றில், வெயிட்டேஜ் மதிப்பெண்ணின் படி, 15 பேர் மட்டும் முன்னிலை பெற்றுள்ளனர். அவர்களில், மூன்று பேரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. 

நாளை அல்லது அடுத்த சில தினங்களில், மூன்று பேர் அடங்கிய பட்டியலை, தேடல் குழுவினர், கவர்னரிடம் வழங்க உள்ளதாக, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. 

வெயிட்டேஜ் மதிப்பெண் என்பது, விண்ணப்பதாரர்களின் ஆராய்ச்சி, பல்கலை மானியக் குழுவின் ஆராய்ச்சி நிதியை சரியாக பயன்படுத்தியது, அதிக அளவு ஆராய்ச்சி மாணவர்களை உருவாக்கியது என, 14 வகை அம்சங்களுக்கு தரப்படுகிறது. 

பல்கலை மானியக் குழுவான, யு.ஜி.சி., விதிகளின்படி, அதிக மதிப்பெண் பெறுவோருக்கே, துணை வேந்தர் பதவி வழங்கப்பட வேண்டும். எனவே, அரசியல் மற்றும் பொருளாதார செல்வாக்கை பயன்படுத்தி, பதவிக்கு வர நினைப்போருக்கு, இது பேரிடியாக இருக்கும் என, கல்வியாளர்கள் கூறுகின்றனர். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.