Pages

Monday, March 27, 2017

பகுதிநேர ஆசிரியர்களின் ஊதியம் உயர்கிறது!

பகுதி நேர ஆசிரியர்களுக்கான ஊதியத்தை உயர்த்த, தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக ஆசிரியர்களின் விபரங்கள் சேகரிக்கப்படுகின்றன. தமிழகம் முழுவதும், அரசு பள்ளிகளில், 16 ஆயிரத்து 549 பேர், பகுதி நேர ஆசிரியர்களாக, 2012ல் நியமிக்கப்பட்டனர். தோட்டக்கலை, கணினி அறிவியல், தையல், ஓவியம், உடற்கல்வி, யோகா, இசை உள்ளிட்ட பாடங்களை, இந்த ஆசிரியர்கள் கற்பித்து வருகின்றனர். வாரத்துக்கு, இரு அரை நாட்கள் வகுப்பு எடுக்கும் வகையில், பாட வேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இவர்களுக்கு மாதம், 7,000 ரூபாய் தொகுப்பூதியமாக வழங்கப்படுகிறது.

விடுமுறை நாட்கள் மற்றும் தேர்வு விடுமுறை காலங்களில், சம்பளம் கிடையாது. இந்நிலையில், பணி நிரந்தரம், சம்பள உயர்வு கோரி, பகுதி நேர ஆசிரியர்கள் கூட்டமைப்பினர், இரு வாரங்களுக்கு முன் போராட்டம் நடத்தினர். அப்போது, புதுக்கோட்டையைச் சேர்ந்த, சீனிவாசன் என்ற ஆசிரியர் தற்கொலைக்கு முயன்றார். இதையடுத்து, பகுதி நேர ஆசிரியர் கூட்டமைப்பினர், சமீபத்தில், பள்ளிக்கல்வி அமைச்சர், செங்கோட்டையன் மற்றும் செயலர் உதயசந்திரன் ஆகியோருடன் பேச்சு நடத்தினர்.
அப்போது, பகுதி நேர ஆசிரியர்களின் சம்பளம் உயர்த்தப்படும்; ஆண்டுக்கு ஒருமுறை பொது மாறுதல் வழங்கப்படும் என, அரசு உறுதி அளித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அனைத்து மாவட்டங்களிலும், தொகுப்பூதிய ஆசிரியர்களின் சுய விபரங்களை, அனைவருக்கும் கல்வி இயக்க அதிகாரிகள் திரட்டி வருகின்றனர். விபரங்கள் சரிபார்க்கப்பட்ட பின், ஊதிய உயர்வுக்கான ஆசிரியர் பட்டியல் தயாரிக்கப்படும் என, பள்ளிக்கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.