Pages

Tuesday, February 28, 2017

மாணவர்களிடம் கட்டணம் வசூலிக்க பல்கலைக்கு தடை: உயர்நீதிமன்றம்

தேனி வேளாண் தொழில்நுட்பக் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களிடம் நேரடியாக கட்டணம் வசூலிக்கும், வேளாண் பல்கலையின் அறிவிப்பை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை ரத்து செய்தது.


தேனி மாவட்டம் குள்ளப்புரம் கிருஷ்ணா கல்வி அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் பலராமன் தாக்கல் செய்த மனு: அறக்கட்டளை சார்பில் தேனியில் வேளாண் தொழில்நுட்பக் கல்லூரி செயல்படுகிறது. இது கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலை அங்கீகாரம் பெற்றது. கல்லூரியில் பி.எஸ்சி.,(விவசாயம்) கற்பிக்கப்படுகிறது.

மாணவர் சேர்க்கையில் 50 சதவீதம் பல்கலை கவுன்சிலிங் மூலம் நிரப்பப்படுகிறது. ‘பி.எஸ்சி., முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை கட்டணத்தை பல்கலையில் செலுத்த வேண்டும்; இரண்டு மற்றும் மூன்றாம் ஆண்டு கட்டணத்தை கல்லூரியில் செலுத்த வேண்டும்’, என பல்கலை அறிவிப்பு கையேட்டில் உள்ளது. இது விதிகளுக்கு முரணானது. அதை ரத்து செய்து, முதலாம் ஆண்டு கட்டணத்தை கல்லூரி வசூலிக்க உத்தரவிட வேண்டும். இவ்வாறு பலராமன் மனு செய்திருந்தார்.

நீதிபதி கே.ரவிச்சந்திரபாபு உத்தரவு:  மாணவர்களிடமிருந்து நேரடியாக கட்டணம் வசூலிக்க பல்கலை, அரசுக்கு அதிகாரம் இல்லை. தேர்வுக் கட்டணம் உட்பட சில கட்டணங்களை வசூலிக்க அதிகாரம் உள்ளது. தனியார் கல்லூரி நிதி நிர்வாகத்தில் தலையிட பல்கலைக்கு அதிகாரம் இல்லை. பல்கலை, கல்லூரி இடையே புரிந்துணர்வு ஒப்பந்தத்தை காரணமாகக் கூறுவதை ஏற்க முடியாது. மாணவர்களிடம் அதிக கட்டணம் வசூல், டீனுக்கு முறையாக சம்பளம் வழங்காமல் இருந்தால் நடவடிக்கை எடுக்க பல்கலைக்கு அதிகாரம் உள்ளது. பல்கலை கையேட்டிலுள்ள அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது, என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.