Pages

Tuesday, February 7, 2017

அரசு பள்ளியில் விடுப்பு எடுத்து 5 ஆண்டுகளாக அமெரிக்காவில் பணி ஆசிரியைக்கு கல்வித்துறை நோட்டீஸ்

நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் புதன்சந்தைபேட்டையை சேர்ந்தவர் மீனலோசனி. இவர், இங்குள்ள ஆவத்திபாளையம் அரசு நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியையாக பணியாற்றி வந்தார். கடந்த 2012 பிப்ரவரி 16ம் தேதி முதல் பள்ளிக்கு வரவில்லை. மாநில தொடக்க கல்வி இயக்குனருக்கு அப்போதே ஒரு பதிவு தபால் அனுப்பியுள்ளார். அதில் மூன்று வருடங்கள் விடுப்பில் செல்வதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் உரிய காரணம் இல்லாததால், தொடக்க கல்வி இயக்குனர் விடுப்புக்கு அனுமதி மறுத்தார். இதையடுத்து ஆசிரியை மீனலோசனி மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, கல்வி அலுவலர்கள் தொடர்ந்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் அமெரிக்காவில் உள்ள தனியார் பள்ளியில், அவர் ஆசிரியையாக பணியாற்றுவது தெரியவந்தது. இதுகுறித்து கல்வி அதிகாரிகள் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பினர். அவரது வீட்டு முகவரிக்கு அனுப்பிய கடிதம் திரும்பி வந்தது. அவரது கணவர் புவனேஷ்வரனுக்கு அனுப்பிய கடிதமும் பெறாமல் திருப்பி அனுப்பப்பட்டது.

இதனிடையே, ஆசிரியையிடமிருந்து உரிய விளக்கம் கிடைக்காததால், ஆவத்திபாளையம் நடுநிலைப்பள்ளியில் புதிய ஆசிரியை நியமிக்கப்படாததால், 5 ஆண்டாக மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு சென்றது தொடர்பாக அனுப்பப்பட்ட கடிதங்களுக்கு விளக்கம் அளிக்காத ஆசிரியை மீது மாவட்ட கல்வி அதிகாரி 17(பி) சட்ட விதிகளின் படி குற்றச்சாட்டு குறிப் பாணை பிறப்பித்துள்ளார். 

இதற்கான நோட்டீஸை நேற்று புதன்சந்தையில் உள்ள ஆசிரியை மீனலோசனி வீட்டு கதவில் பள்ளிபாளையம் உதவி கல்வி அலுவலர் ஒட்டினார். இன்னும் இரண்டு நாட்களில் இந்த குற்றச்சாட்டிற்கு விளக்கம் அளிக்காவிட்டால், அலுவலக ஆவணங்களின் அடிப்படையில் இறுதியாணை பிறப்பிக்கப்படுமென நோட்டீசில் மாவட்ட கல்வி அதிகாரி எச்சரிக்கை செய்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.