Pages

Wednesday, January 4, 2017

அரசுக்காலண்டர் எங்கே? அதிகாரிகள் எதிர்பார்ப்பு !!

தமிழக அரசின் சார்பாக தயாரிக்கப்படும் அரசு காலண்டர், டைரி போன்றவைகள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாத இறுதியில் 3௦-ஆம் தேதி முதல்வர் படத்துடன் தயார் செய்யப்பட்டு தலைமைச் செயலாளரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படுவது வழக்கம். தலைமைச் செயலாளரும், அதைப் பார்த்த பின்னர், அதில் எதுவும் திருத்தம் இருந்தால் அதனை சரிசெய்த பின்னர் ஒப்புதல்

வழங்குவார். இறுதியாக முதல்வரின் பார்வைக்குச் சென்று முதல்வர் அனுமதி வழங்கியதன்பேரில் அரசு காலண்டர், டைரி போன்றவைகள் தயார் செய்யப்பட்டு புத்தாண்டு தினத்தன்று தலைமைச் செயலகத்தில் இருந்து அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பப்படும். சில நேரங்களில், முக்கிய பிரமுகர்களுக்காக மட்டும் சென்னையிலேயே அவைகள் தயார் செய்யப்பட்டு கொடுக்கப்படும். மற்ற மாவட்டங்களில் அந்தந்த இடங்களிலேயே தயார் செய்து கொள்ள அனுமதிக்கப்படும்.

இந்தமுறை புத்தாண்டு பிறந்து இன்று வரை 3 நாட்களாகியும், இன்னும் காலண்டர், டைரி தயாரிக்கவில்லையா என்று தலைமைச் செயலகத்தில் விசாரித்தபோது, இன்னும் தயார் செய்யப்படவில்லை என்று தெரியவந்தது. கருணாநிதி முதல்வராக இருந்த போதெல்லாம் அரசு காலண்டர், டைரி போன்றவைகள் முறையாக தயார் செய்யப்பட்டு வழங்கப்படும். அதேபோல், ஜெயலலிதா முதல்வராக இருந்தபோதும் அதே நடைமுறைதான் அமலில் இருந்தது.

தற்போது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஜெயலலிதா பதவி நீக்கம் செய்யப்பட்டபோது முதல்வராக ஓ.பன்னீர் செல்வம் இருந்த சமயத்தில் முதல்வர் படம் இல்லாமல் வெளியிடப்பட்டது. மீண்டும் ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்றபோது, ஜெயலலிதா படத்துடன் அரசு காலண்டர் வெளியிடப்பட்டது.

ஆனால், தற்போது முதல்வர் தனது படத்தை அரசு காலண்டரில் வைக்க வேண்டாம் என்று தெரிவித்துள்ளார். மேலும், தற்போது நிலவிவரும் குழப்பமான அரசியல் சூழ்நிலையில் ஜெயலலிதாவுக்காக வேண்டாம் என்றாரா அல்லது ஒட்டுமொத்த அதிமுகவினரும் சசிகலாவை முதல்வராக பதவியேற்க வேண்டும் என்று கூறிவரும் வேளையில் வேண்டாம் என்று தெரிவித்தாரா எனத் தெரியவில்லை என்று அரசு வட்டாரத்தினர் தகவல் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.