Pages

Thursday, January 19, 2017

அரசுப் பொதுத் தேர்வில் சிறப்பிடம்: மாணவர்களுக்கு பரிசுகளை வழங்கினார் முதல்வர்ஓ.பன்னீர்செல்வம்.

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில் மாநில அளவில் முதல் இடங்களைப் பெற்ற மாணவ, மாணவியருக்கு காசோலைகளையும், பாராட்டுச் சான்றிதழ்களையும் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புதன்கிழமை வழங்கினார். 


இதற்கான நிகழ்ச்சி தலைமைச் செயலகத்தில் நடைபெற்றது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிவிப்பு:பள்ளிக் கல்வி, சமூக நலம் -சத்துணவுத் திட்டம், ஆதிதிராவிடர் -பழங்குடியினர் நலம், வனம், பிற்படுத்தப்பட்டோர் -மிகவும் பிற்படுத்தப்பட்டோர், மாற்றுத்திறனாளிகள் நலன் ஆகிய துறைகளால் நடத்தப்படும் பள்ளிகளில் பயின்று, அரசு பொதுத் தேர்வுகளில் சிறப்பிடம் பெறும் மாணவ -மாணவிகளுக்கு ரொக்கப் பரிசும்,பாராட்டுச் சான்றிதழையும் தமிழக அரசு அளித்து வருகிறது.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெறும் மாணவர்-மாணவிக்கு தலா ரூ.25 ஆயிரமும், ஆதிதிராவிடர் நலப் பள்ளிகளில் படித்து மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற மாணவர் மற்றும் இரண்டு மாணவியருக்கு தலா ரூ.25 ஆயிரமும், மாற்றுத்திறனாளிகள் நலத் துறையின்கீழ் இயங்கும் பள்ளிகளில் பயின்று மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற மூன்று பேருக்கு தலா ரூ.25ஆயிரத்தையும் தமிழக அரசு அளிக்கிறது.

அதன்படி, கடந்த கல்வியாண்டில் 10 -ஆம் வகுப்பு அரசு பொதுத் தேர்வில் மாநில அளவில் முதல் இடத்தைப் பெற்ற 13 மாணவ -மாணவியருக்கு மொத்தம் ரூ.3.25 லட்சத்துக்கான காசோலைகள், பாராட்டுச் சான்றிகழ்களை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் நேரில் அளித்தார்.இதேபோன்று, பிளஸ் 2 தேர்வில் முதல் இடம் பெறும் மாணவ- மாணவியருக்கு ரூ.50 ஆயிரம் அளிக்கப்படுகிறது. அந்த வகையில், முதல் இடத்தைப் பெற்ற 19 மாணவ-மாணவியருக்கு ரூ.9 லட்சத்து 50 ஆயிரத்துக்கான காசோலைகள் -பாராட்டுச்சான்றிதழ்களை முதல்வர் அளித்தார்.

பெருமை சேர்க்க வேண்டும்: இந்த நிகழ்வின்போது, முதல்வர்ஓ.பன்னீர்செல்வம் பேசுகையில், "மாணவர்கள் தொடர்ந்து சிறப்பாகப் படித்து நமது மாநிலத்துக்கு பெருமை சேர்க்கவேண்டும். மாணவ, மாணவியர்கள் கல்வியில் மேலும் வளர்ச்சியுற்று சிறப்புடன் வாழ வாழ்த்துகிறேன்' என்றார்.இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் வி.சரோஜா, க.பாண்டியராஜன், தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன்,அரசு ஆலோசகர் ஷீலா பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.