Pages

Thursday, January 19, 2017

ஜல்லிக்கட்டு நடத்த கிராம சபையே போதும்: போராட்டத்துக்கு இடையே எழும் நம்பிக்கை துளிர்

ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த அனுமதி கோரி தமிழகம் முழுவதும் லட்சக்கணக்கான இளைஞர்கள் போராடி வரும் நிலையில், அதற்கான அதிகாரம் நம்மிடமே உள்ளது என்ற நம்பிக்கைக் குரல் எழுந்துள்ளது.


இது குறித்து காங்கிரஸ் கட்சியின் செய்தித் தொடர்பாளர் ஜோதிமணி கூறியிருப்பதாவது, பஞ்சாயத்து ராஜ் சட்டத்தின் படி கிராம சபைகள் மிகுந்த சக்திவாய்ந்தவை. ஊராட்சி மன்றத் தலைவரை விட அதிக அதிகாரம் மிகுந்தவை.
அமராவதி ஆற்றில் மணல் கொள்ளை மற்றும் சுற்றுச்சூழலுக்கு கெடுதல் விளைவிக்கும் கோழிப் பண்ணைக்கு எதிரான எங்கள் போராட்டங்களில் கிராமசபையை பயன்படுத்தியே நீதிமன்றத்தில் வழக்குகளை வென்றோம்.  நிரந்தரத் தடை வாங்கினோம்.

கேரளாவில் ப்ளாச்சிமாடா பஞ்சாயத்து கிராமசபையின் அதிகாரத்தைப் பயன்படுத்தியே கேரள உயர்நீதிமன்ற உத்திரவு மூலம் கோகோ கோலா ஆலையை மூடியது (பிறகு உச்சநீதிமன்றம் ஆலைக்கு மீண்டும் அனுமதி கொடுத்துவிட்டது)

அலங்காநல்லூர் ஊராட்சி கிராமசபை தீர்மானம் மூலம் ஜல்லிக்கட்டு நடத்த முயற்சி செய்யலாம். சட்டமன்றம், நாடாளுமன்றத்தை விட உள்ளூர் விவகாரங்களில் கிராமசபைக்கு அதிகாரம் அதிகம்.

உள்ளூர் விவகாரங்களை தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளைவிட உள்ளூர் மக்களே திறம்படக் கையாளமுடியும், அதற்கான உரிமை அவர்களுக்கு உண்டு என்ற அடிப்படையிலேயே கிராமசபைக்கு பஞ்சாயத்துராஜ் சட்டத்தில் அதிக அதிகாரம் அளிக்கப்பட்டது.

சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களைப் போல 18வயது நிரம்பிய அனைவரும் கிராமசபையின் உறுப்பினர்கள்.

ராஜீவ்காந்தியின் கனவு திட்டம் இது. ஆனால் துரதிர்ஷ்டவசமாக மக்கள் தங்கள் அருகிலேயே இருக்கும் அதிகாரத்தைப் புரிந்துகொள்ளவில்லை என்று பதிவு செய்துள்ளார்.

அதே போல,  மூத்த பத்திரிகையாளர் ஷ்யாம் தனியார் தொலைக்காட்சியில் பேசுகையில், பிரதமர் நரேந்திர மோடி, உச்ச நீதிமன்ற அதிகாரத்துக்கு உட்பட்டவர். அவரிடம் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கோரினால் எப்படி கிடைக்கும். அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை நடத்த கிராம சபைக்கு முழு அதிகாரம் உள்ளது.

ஜல்லிக்கட்டை நடத்துவதால் கிராம சபைக்கு உச்ச நீதிமன்றத்தால் எந்த சிறைத் தண்டனையும் கொடுக்க முடியாது. அபராதம் மட்டுமே விதிக்க முடியும். எனவே, நம்மிடம் இருக்கும் கிராம சபை எனும் அதிகாரத்தை பயன்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.