Pages

Sunday, January 8, 2017

பிறந்து ஓராண்டாகியும் குழந்தையின் பிறப்பு சான்றிதழ் பெறாதவர்களுக்கு புது வாய்ப்பு : தமிழக அரசு புது உத்தரவு

தமிழகத்தில் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி போன்ற உள்ளாட்சி அமைப்புகள் மூலம் தான் பிறப்பு, இறப்பு சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1990க்கு பின் பிறந்தவர்களுக்கு பிறப்பு சான்றிதழ் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளதால் தற்போது பிறப்பு சான்றிதழ் வாங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
அதேபோன்று, இறந்தவரிடம் இருந்து சொத்துக்களை மாற்றி கொள்வதற்கு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக இறப்பு சான்றிதழ் பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

பொதுவாக, பிறந்தோ அல்லது இறந்தோ 1 வருடத்திற்குள் கிராம நிர்வாக அலுவலரிடம் பிறப்பு அல்லது இறப்பை பதிவு செய்யா விட்டால் நீதிமன்றத்தை நாடி அதற்கான ஆணை பெற்ற பிறகுதான் வருவாய் கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள் பிறப்பு சான்றிதழ் பதிவு செய்கின்றனர். இதனால், பொதுமக்கள் நீதிமன்றத்திற்கு நடையாய் நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக பொதுமக்களுக்கு வீண் அலைச்சலும், கால விரயமும் ஏற்பட்டுள்ளது.

இதுதொடர்பாக பொதுமக்களிடம் இருந்து அரசுக்கு ஏராளமான புகார்கள் சென்றது. இதை தொடர்ந்து பொது சுகாதாரத்துறை தலைமை பதிவாளர் அனைத்து நகராட்சி நிர்வாக ஆணையர், டவுன் பஞ்சாயத்து இயக்குனர், கலெக்டர்கள், மாவட்ட வருவாய் அதிகாரிகள் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில், சட்ட விதி 3ன் கீழ் பிறப்பு, இறப்பு 1 ஆண்டுக்குள் பதிவு செய்யாமல் விடப்பட்டாலும், வருவாய் கோட்டாட்சியர் நிலையிலான அதிகாரிகள் பதிவு செய்ய அதிகாரம் வழங்கப்படுகிறது’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக, இனி வருங்காலங்களில் 1 ஆண்டிற்கு பிறகு பிறப்பு, இறப்பு சான்றிதழ் பெற பொதுமக்கள் அலைய வேண்டியதில்லை என்ற நிலை உருவாகியுள்ளது. இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத வருவாய்துறை அதிகாரி ஒருவர் கூறும் போது, ஒரு வருடத்தில் பிறப்பு, இறப்பு சான்றிதழ் பதிவு செய்யப்பட்டு, அந்த ஆவணங்கள் பதிவுத்துறைக்கு அனுப்ப வேண்டும். எங்களால் இந்த ஆவணங்களை பாதுகாக்க முடியுமே தவிர திருத்தம் மேற்கொள்ள கூடாது. ஒரு வருடத்தில் பதியாதவர்கள் நீதிமன்றத்தை அணுகி அதன்பிறகு வட்டாட்சியர் அலுவலகத்தில் பதிவு செய்கின்றனர். பொதுமக்கள் 3 மாதங்கள் வரை நடையாய், நடக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

தற்போது சட்ட திருத்தத்தில் கொண்டு வந்ததன் மூலம் பொதுமக்கள் அலைய வேண்டிய தேவையில்லை. வட்டாட்சியர் அலுவலகத்திலேயே இனி பதிவு செய்யமுடியும். இதற்கான ஆவணங்களை அவர்கள் வட்டாட்சியர் முன்பு சமர்பிக்க வேண்டும். இதற்கான விண்ணப்பங்களை வட்டாட்சியர் அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம்’ என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.