புதிய ஓய்வூதிய திட்டத்தில் ஓய்வூதியர்கள் குறித்த விபரம் மத்திய அரசிடம் இல்லை' என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் தெரிந்துள்ளது.புதிய ஓய்வூதிய திட்டத்தில் மேற்கு வங்கம், திரிபுரா தவிர்த்த மாநில அரசு மற்றும் மத்திய அரசு ஊழியர்கள் இணைக்கப்பட்டனர். 2016 ஜூலை வரை 17 லட்சத்து 11 ஆயிரத்து 727 மத்திய அரசு ஊழியர், 30 லட்சத்து 72 ஆயிரத்து 872 மாநில அரசு ஊழியர், ஐந்து லட்சத்து 4,019 பொதுத்துறை ஊழியர்கள் உள்ளனர்.
இவர்களிடம் சந்தா தொகையாக ஒரு லட்சத்து 38 ஆயிரத்து 935 கோடி வசூலிக்கப்பட்டு, ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் செலுத்தப்பட்டது. ஆனால், தமிழக அரசு ஊழியர், ஆசிரியர்கள் 4.23 லட்சம் பேரின் சந்தா தொகை ஒன்பதாயிரம் கோடி ரூபாய், ஆணையத்திடம் இதுவரை போய் சேரவில்லை; தமிழக அரசின் வசமே உள்ளது. பணியின் போது இறந்தோர் குடும்பத்திற்கு மட்டும் நுாறு சதவீத தொகையை ஆணையம் அளித்து வருகிறது; ஓய்வு பெற்றால் 60 சதவீதம் மட்டுமே கிடைக்கும். மீதியை பாரத ஸ்டேட் வங்கி, எல்.ஐ.சி.,-- யு.டி.ஐ., போன்ற நிறுவனங்களில் ஆணையம் முதலீடு செய்துள்ளது.
அந்நிறுவனங்கள் முதலீட்டிற்கான வட்டியை ஓய்வூதியமாக அளிக்கின்றன. மிக குறைந்த வட்டியை நிர்ணயம் செய்துள்ளதால் ஓய்வூதியர்களுக்கு, மாதம் ஆயிரம் ரூபாய் கூட கிடைப்பதில்லை.
இதுகுறித்து திண்டுக்கல்லை சேர்ந்த, புதிய ஓய்வூதிய திட்ட போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் பிரடரிக் ஏங்கல்ஸ், ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் விபரங்களை கேட்டார். ஆணையம், 'எங்களிடம் விபரம் இல்லை; ஓய்வூதியத்தை முதலீடாக பெற்ற பாரத ஸ்டேட் வங்கி, எல்.ஐ.சி.,- -யு.டி.ஐ., நிறுவனங்களிடம் விபரங்களை பெறலாம்' என தெரிவித்தது. அந்த மூன்று நிறுவனங்களும், 'ஓய்வூதியர்கள் குறித்த விபரமே இல்லை' என, தெரிவித்துள்ளன; இதனால் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். பிரடரிக் ஏங்கல்ஸ் கூறியதாவது:ஓய்வூதியர்கள் குறித்த விபரம் ஆணையம், முதலீடு நிறுவனங்களிடம் இல்லாதது அதிர்ச்சி அளிக்கிறது. வங்கிகளில் 9 சதவீதம் வரை வட்டி தரப்படுகிறது. அரசு ஊழியர்களின் ஓய்வூதியத்திற்கு 5.5 சதவீதம் மட்டுமே வட்டி தரப்படுகிறது. ஓய்வூதியம் பெறும்போதே நுாறு சதவீத தொகையை கொடுத்தால், அவர்களே வங்கிகளில் முதலீடு செய்து கொள்வர். இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.