Pages

Wednesday, December 28, 2016

நலத்திட்ட பொருட்கள் வழங்க ’நோடல்’ மையம் தேவை!

பாடப்புத்தகம் உள்ளிட்ட, நலத் திட்ட பொருட்கள் வழங்க, வட்டார அளவில், நோடல் மையம் அமைத்தால், பயனுள்ளதாக இருக்கும் என்பது, தலைமையாசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. சமச்சீர் கல்வித்திட்டம் நடைமுறைக்கு வந்தபின், புத்தகச் சுமையை குறைக்க, மூன்று பருவங்களாக பாடப்புத்தகங்கள் அச்சிட்டு வினியோகிக்கப்படுகின்றன. இதுதவிர, சீருடை, நோட்டுகள், மூன்றாம் பருவத்திற்கு, பிரத்யேகமாக மாணவர்களுக்கு வழங்கப்படுகின்றன. 


இப்பொருட்கள், நோடல் மையங்களில் இருந்து, அந்தந்த பள்ளிக்கு கொண்டு வர உத்தரவிடப்பட்டுள்ளது. அரையாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, ஜன., 2ம் தேதி, பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு, பாடப்புத்தகங்கள் வழங்க, தயார் நிலையில் வைக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கோவையில், தொடக்க, நடுநிலைப் பள்ளிகளுக்கு, புலியகுளம், அந்தோணியார் நடுநிலைப்பள்ளி, மாநகராட்சி நடுநிலைப் பள்ளிகளிலும்; மேல்நிலை வகுப்புகளுக்கு, ராமகிருஷ்ணாபுரம், மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஒண்டிப்புதுார், ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், நோடல் மையங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.

இங்கிருந்து, நகரை சுற்றியுள்ள பள்ளிகளில், புத்தகங்கள் எடுத்து வருவது எளிது. ஆனால், தொண்டாமுத்துார், ஆலாந்துறை, ஆனைமலை, வால்பாறை உள்ளிட்ட, தொலை துாரங்களில் உள்ள பள்ளிகளுக்கு, புத்தகங்கள் எடுத்து வர, போக்குவரத்து செலவினத்திற்கு நிதியின்றி, தலைமையாசிரியர்கள் திண்டாடுகின்றனர்.

மேலும், பிளஸ் 1 மாணவர்களுக்கு சைக்கிள், பிளஸ் 2 மாணவர்களுக்கு லேப்-டாப் இன்னும் வழங்கப்படவில்லை. இப்பொருட்களை பள்ளிக்கு, பாதுகாப்பாக எடுத்துவர, தலைமையாசிரியர்கள் சொந்த பணத்தை, செலவிடும் நிலை உள்ளது. 

எனவே, வட்டாரம் தோறும், நோடல் மையங்கள் அமைத்தால், பள்ளிக்கு புத்தகங்கள் எடுத்து செல்ல, வசதியாக இருக்கும் என்பது, தலைமையாசிரியர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

அரசுப்பள்ளி தலைமையாசிரியர்கள் சிலர் கூறுகையில், ”அனைத்து பள்ளிகளுக்கும், நலத்திட்ட பொருட்களுக்கான போக்குவரத்து செலவினங்களுக்கு, 750 ரூபாய் வழங்கப்படுகிறது. இத்தொகை, மலைப்பகுதி பள்ளிகளுக்கு போதாது. 

நிதியை அதிகப்படுத்தி தருவதை காட்டிலும், பள்ளிகளுக்கான புத்தக தேவையை கணக்கெடுத்து, வட்டாரம் வாரியாக பிரித்தளித்தால், பயனுள்ளதாக இருக்கும். இதை, அடுத்த கல்வியாண்டு முதல் நடைமுறைபடுத்த, அதிகாரிகள் முன்வர வேண்டும்,” என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.