Pages

Tuesday, November 29, 2016

இலவச ’பஸ் பாஸ்’ இல்லையா?; மாணவர்களுக்கு அழைப்பு

’இலவச, ’பஸ் பாஸ்’ வாங்காத மாணவர்கள், உடனடியாக வாங்கிக் கொள்ளலாம்’ என, மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இது குறித்து, அவர்கள் கூறியதாவது: சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில், பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, சென்னை மாநகர போக்குவரத்து கழகம், இலவச பஸ் பாஸ் வழங்குகிறது. 


இந்த கல்வி ஆண்டில், 3.56 லட்சம் மாணவர்களுக்கு, இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு உள்ளது. ஒவ்வொரு ஆண்டும், ஜூலைக்குள், இலவச பஸ் பாஸ் வழங்கப்பட்டு விடும். மாணவர்களின் முகவரி, வகுப்பு, பள்ளி, கல்லுாரிகளின் மாற்றங்கள் உள்ளிட்டவற்றின் காரணமாக, ஜூலைக்குள், பஸ் பாஸ் பெற இயலாத மாணவர்கள், அவர்களின், பழைய பஸ் பாசை காட்டி, ஆக., வரை பயணிக்க, சிறப்பு சலுகை வழங்கப்பட்டது. 

ஆனால், பள்ளி, கல்லுாரி படிப்புகளை முடித்த மாணவர்கள் கூட, இன்னும் பழைய பஸ் பாசை காட்டியே, இலவசமாக பயணிக்கின்றனர்; சில பள்ளிகள், இதுவரை இலவச பஸ் பாஸ் பெற விண்ணப்பிக்கவில்லை. 

இதனால், போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, மாணவர்கள் முறைகேடுகளில் ஈடுபடவும் வாய்ப்பாக அமைகிறது. இதை, உடனடியாக கண்காணிக்க வேண்டும் என, போக்குவரத்து மேற்பார்வையாளர்களும், பரிசோதகர்களும் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

மேலும், கிளை மேலாளர்கள், உதவி கிளை மேலாளர்கள், நடத்துனர்களுக்கும், சுற்றறிக்கை அனுப்பப்பட்டு உள்ளது. பழைய பஸ் பாஸ் மூலம் பயணிக்கும் மாணவர்களை கண்டறிந்து, அந்த பாசை பறிமுதல் செய்ய, போக்குவரத்து மேற்பார்வையாளர்களுக்கும், பரிசோதகர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுவரை, பஸ் பாஸ் பெற விண்ணப்பிக்காத பள்ளிகள், மாவட்ட கல்வி அதிகாரி மூலம், குறிப்பிட்ட காலத்திற்குள், புதிய பஸ் பாஸ் பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.