Pages

Friday, November 11, 2016

’எமிஸ்’ இணையதளத்தில் ஏகப்பட்ட தகவல் ’மிஸ்’

’எமிஸ்’ இணையதளத்தை முறையாக பராமரிக்காமல், மாணவர்களின் தகவல்களை அடிக்கடி அனுப்புமாறு உத்தரவிடுவதால், ஆசிரியர்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். பொதுத்தேர்வு நடைமுறைகளில் மாற்றம் கொண்டுவர, ஆதார் எண் சேகரிக்குமாறு, அரசுத் தேர்வுத் துறை உத்தரவிட்டுள்ளது. இதை, இம்மாத இறுதிக்குள் சேகரித்து, தகவல் பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. 


இந்த புதிய உத்தரவால், ஆசிரியர்களுக்கு கூடுதல் பணிச்சுமை ஏற்பட்டுள்ளதாக புலம்புகின்றனர். மேலும், பள்ளிக்கல்வி தகவல் மேலாண்மை மையம் (எமிஸ்) என்ற திட்டம், கடந்த, 2012ல் துவங்கப்பட்டது.

இதில், அரசுப்பள்ளி மாணவர்களின் பெயர், வயது, ரத்த வகை, ஆதார் எண் உள்ளிட்ட அனைத்து தகவல்களும் பதிவேற்ற உத்தரவிடப்பட்டது. இதற்கு, பள்ளி வாரியாக பிரத்யேக, பயனர் பெயர், கடவுச்சொல் அளிக்கப்பட்டுள்ளது. 

இத்தகவல்களை, கல்வித்துறை அதிகாரிகள் மட்டுமே, ஒருங்கிணைத்து பார்வையிட முடியும். ஆனால், ஆன்லைன் பதிவேற்றம் செய்வதில் உள்ள குளறுபடிகளால், மாணவர்களின் தகவல்கள் முழுமையாக திரட்டுவதில் சிக்கல் நீடிக்கிறது.

இதனால், அனைத்து கல்வி சார் செயல்பாடுகளுக்கும், மாணவர்களின் தகவல்களை அளிக்குமாறு, அடிக்கடி கல்வித்துறை சார்பில், சுற்றறிக்கை அனுப்பப்படுகிறது. 

இதை திரட்டி அனுப்ப, ஆசிரியர்கள் படாதபாடு படுகின்றனர். தற்போது, பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு, வரும் 14ம் தேதி, முன் அரையாண்டு தேர்வுகள் துவங்கவுள்ளன. இதற்கு பின், டிச., 7ம் தேதி, அரையாண்டு தேர்வு நடக்கிறது.

தேர்வுப்பணி, விடைத்தாள் திருத்துதல் என, ஆசிரியர்கள் ’படுபிசி’யாக சுழன்று கொண்டிருப்பர். இந்நேரத்தில், ஆதார் எண் சேகரிக்குமாறு உத்தரவிட்டுள்ளதால், ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

இதுகுறித்து, அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறியதாவது:

மாணவர்களின் ஆதார் எண், எமிஸ் இணையதளத்தில் உள்ளது. இதை, கல்வித்துறை அதிகாரிகள் முறையாக, ’அப்டேட்’ செய்யாததால், பள்ளிகளில் இருந்து அடிக்கடி தகவல் அளிக்க உத்தரவிடுகின்றனர். தேர்வு நேரத்தில், ஆதார் எண் சேகரித்தல், அட்டை இல்லாத மாணவர்களுக்கு முகாம் நடத்துதல் என, புதிய உத்தரவுகளை பிறப்பித்துள்ளனர்.

இணைய வசதியில்லாத பள்ளிகளில், தனியார் பிரவுசிங் சென்டர்களை தேடி சென்று, தகவல்களை பதிவேற்றம் செய்ய வேண்டியுள்ளது. இதுபோன்ற தகவல் சேகரிப்பு பணிகளை, கல்வியாண்டு துவங்கும் போதே, முறையாக திட்டமிடாமல், அவசரகதியில் குறுகிய கால அவகாசத்தில் செய்வதால், பிழைகள் ஏற்பட வாய்ப்புண்டு. 

இனிவரும் காலங்களிலாவது, ஆசிரியர்களுக்கு கற்பித்தல் அல்லாத பணிகளை திணிக்காமல் இருக்க, நடைமுறைகளை எளிமைப்படுத்த வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.