Pages

Tuesday, November 29, 2016

அரசு ஊழியர்களுக்கு நாளை சம்பளம்: நிலைமையை சமாளிக்க ரூ. 200 கோடி ஒதுக்கீடு

அரசு ஊழியர்களுக்கு வங்கிகள் மூலம் நவம்பர் மாத ஊதியம் புதன்கிழமை வழங்கப்படவிருப்பதால் கூட்ட நெரிசல், பணத்தட்டுப்பாட்டை போக்கும் வகையில் சுமார் 200 கோடி மதிப்பிலான ரூபாய் நோட்டுகள் ஏடிஎம் மையங்களில் நிரப்பப்படவுள்ளன. புழக்கத்தில் இருந்த ரூ. 500, ரூ. 1,000 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டதோடு, புதிய ரூ. 2000 நோட்டுகள் புழக்கத்தில் விடப்பட்டன.


மத்திய அரசின் இந்த அறிவிப்பைத் தொடர்ந்து வங்கி ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் எடுக்க அதிகளவில் மக்கள் வருவதால் பெரும்பாலான மையங்கள் பணம் இன்றி மூடப்பட்டுள்ளன. இந்த நிலையில், சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட புதிய 500 ரூபாய் நோட்டுகள் ஒரு சில இடங்களைத் தவிர்த்து, பெரும்பாலான மாவட்டங்களில் இன்னும் புழக்கத்துக்கு கொண்டு வரப்படவில்லை. வங்கி ஏடிஎம் மையங்களில் குறைவான தொகைதான் பெற முடியும் என்பதோடு, பணமின்றி பெரும்பாலானவை மூடப்பட்டிருப்பதால் மாநிலம் முழுவதிலும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியர்களுக்கு நவம்பர், டிசம்பர் மாத ஊதியத்தை ரொக்கமாக வழங்க வேண்டுமென அரசு ஊழியர் அமைப்பு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன. வேலூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் ஒரு லட்சம் அரசு ஊழியர்கள் உள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஊதியம் வழங்க இன்னும் ஒரு நாள் மட்டுமே உள்ளதால் பணத் தட்டுப்பாடு நிலைமையை வங்கிகள் எப்படி சமாளிக்கப் போகின்றன என்ற கேள்வி மக்கள் மத்தியில் நீடித்து வருகிறது.
இதுகுறித்து மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் தாமோதரனிடம் கேட்டதற்கு, அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தை வங்கி ஏடிஎம் மையங்களில் எடுக்க அதிகமானோர் வரக் கூடும் என்பதால், அதனை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு வரப்பெற்றுள்ள 500 ரூபாயில் சுமார் 200 கோடி மதிப்பிலான 500 ரூபாய் நோட்டுகள் வேலூர் மாவட்டத்துக்கு ஒதுக்கப்படவுள்ளன.
மாவட்டம் முழுவதிலும் உள்ள ஏடிஎம் மையங்களில் வருகிற புதன்கிழமை (நவ.30) 500 ரூபாய் நோட்டுகள் அதிகளவில் நிரப்பப்படவுள்ளன. இதன்மூலம் பணத்தட்டுப்பாட்டை குறைப்பதோடு, கூட்ட நெரிசலையும் கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
அத்தியாவசியத் தேவைகளுக்கு மட்டுமே ஏடிஎம் மையங்களில் இருந்து பணம் பெற்றுக் கொள்வதோடு, வங்கிகள் மூலம் பெரிய வர்த்தக நிறுவனங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள பாய்ன்ட் ஆப் சேல்ஸ் மிஷினைப் பயன்படுத்தி மளிகைப் பொருள்கள் போன்றவற்றை வாங்க பொதுமக்கள் முன்வர வேண்டும் என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.