Pages

Monday, October 31, 2016

‘அமிர்தா இன்ஸ்டிடியூட்’, தொலைநிலைக் கல்வி மையமா? கல்லூரியா?

கோவை சோமையாம்பாளையம் ’அமிர்தா இண்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஓட்டல் மேனேஜ்மென்ட்’ நிறுவனம், தொலைநிலைக் கல்வி மையமாக செயல்பட அனுமதி பெற்று, முழுநேர கல்லூரியாக செயல்படுகிறது.


ஆறு ஆண்டுகளாக செயல்படும் இந்நிறுவனத்தில் 400 மாணவர்கள் படிக்கின்றனர். பாரதியார் பல்கலையில் ஒப்பந்தம் மூலம் ஆறு பாடப் பிரிவுகளுக்கும்; தமிழக வேலைவாய்ப்பு பயிற்சி துறையின் கீழ், எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஓராண்டு சான்றிதழ் பயிற்சி வகுப்புக்கும் தற்காலிக அங்கீகாரம் பெற்றுள்ளது.

ஆனால், மலேசியா திறந்தநிலை பல்கலை, மெகாடெக் சர்வதேச கல்லூரி உட்பட நிறுவனங்களின் பெயர்களில் பட்டம், பட்டயப் படிப்புகளை நடத்தி கல்லூரி போல செயல்படுகிறது. கல்லூரிகள் துவங்க, கல்லூரி வளாகத்தின் பரப்பளவு, வகுப்பறைகளின் எண்ணிக்கை, ஆய்வகம் மற்றும் நூலக வசதி, மைதானம், தகுதியுடைய பேராசிரியர்கள் என, பல்வேறு வரையறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இவ்விதிகளின் படி, பல்கலை மானியக்குழு (யு.ஜி.சி.,) கல்லூரிகளுக்கு அங்கீகாரம் வழங்குகிறது.

தொலைநிலை கல்வி மையமாக செயல்படவேண்டிய இந்நிறுவனம், கல்லூரிக்கான எந்த அடிப்படைத் தகுதியும் இல்லாமல், சர்வதேச கல்வி நிறுவனம் போல் விளம்பரங்கள் செய்து, முறைகேட்டில் ஈடுபட்டுள்ளது. விளம்பரங்களை நம்பி இங்கு சேர்ந்த மாணவர்கள் கோவை கலெக்டர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

கோவை அமிர்தா இன்டர்நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆப் ஹோட்டல் மேனேஜ்மென்ட் நிறுவன செயல் அலுவலர் உண்ணிகிருஷ்ணன் கூறியதாவது:பாரதியார் பல்கலை, மலேசியா திறந்தநிலை பல்கலை ஆகியவற்றில் அங்கீகாரம் பெற்றுள்ளோம். அனைத்து பாடப்பிரிவுகளுக்கும் முறையான அங்கீகாரம் உள்ளது. புகார் கொடுத்துள்ள மாணவர்கள் எங்கள் கல்வி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் அல்ல. குறிப்பிட்ட சிலர் படிப்பை பாதியில் விட்டுச்சென்றவர்கள். உள்நோக்கத்துடன் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. சட்டப்பூர்வமாக நடவடிக்கை மேற்கொள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

பாரதியார் பல்கலை தொலைநிலைக் கல்வி மைய இயக்குனர் (பொறுப்பு) மதிவாணன் கூறுகையில், “சி.சி.ஐ.ஐ., மூலம் கடந்த 2015 ஜன., 22ம் தேதி, இந்நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, ஆறு பாடப் பிரிவுகளுக்கு அனுமதி வழங்கியுள்ளோம். குறிப்பிட்ட பாடப் பிரிவுகளுக்கு போதிய வசதி இன்மையால் மாணவர் சேர்க்கையை நிறுத்தியுள்ளோம்,” என்றார்.

பல்கலை துணைவேந்தர் கணபதி கூறுகையில், ”நான் துணைவேந்தர் பொறுப்பேற்கும் முன், இக்கல்லூரிக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கோவை அமிர்தா தொலைநிலைக் கல்வி மையம் மீது கூறப்பட்டுள்ள புகார், உண்மை என்பது தெரியவந்தால் மையம் நிரந்தரமாக மூடப்படும்,” என்றார்.

சுயநிதி கல்லூரிகளின் நிர்வாகிகள் சங்க மாநிலத்தலைவர் கலீல் கூறியதாவது: யு.ஜி.சி., பல்கலைகள் தொலைநிலைக் கல்வி மையம் என்ற பெயரில், சி.சி.ஐ.ஐ., (தொழில் மற்றும் கல்வி நிறுவனங்களின் கூட்டுமையம்) சி.பி.பி., - சி.ஓ.பி., ஆகிய பிரிவுகளுக்கு தடைவிதித்துள்ளது.

பாரதியார் பல்கலையில் விதிமுறைகளை மீறி இப்பிரிவுகளில் பல கல்வி மையங்களுக்கு வருமானம் கருதி அனுமதி அளித்துள்ளதால், மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. இதுகுறித்து, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதி பெற்ற பாடப் பிரிவுகள்:
பாரதியார் பல்கலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டு, மூன்றாண்டு பி.எஸ்சி., உணவக மேலாண்மை, இரண்டாண்டு உணவக மேலாண்மை பட்டயப் படிப்பு, இரண்டாண்டு ’அட்வான்ஸ் கிளினிக்கல் லேபார்ரேட்டரி’ பட்டயப் படிப்பு, ஓராண்டு ஹெல்த் கேர் அசிஸ்டன்ஸ், பி.எஸ்சி., கேட்டரிங் சயின்ஸ், இரண்டாண்டு எம்.பி.ஏ., ஹாஸ்பிட்டாலிட்டி மேனேஜ்மென்ட் ஆகிய ஆறு பாடப்பிரிவுகளை நடத்த சி.சி.ஐ.ஐ., பிரிவின் கீழ் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆனால், கல்லூரி இணையதளத்தில், புதுப்புது பெயர்களில், மூன்றாண்டு உணவக மேலாண்மை, மூன்றாண்டு மற்றும் இரண்டாண்டு கேட்டரிங் டெக்னாலஜி, ஓராண்டு புட் புரக்டக்சன்ஸ் பட்டயப் படிப்பு, ஓராண்டு எப் அண்டு பி சர்வீஸ் பட்டயப் படிப்பு நடத்துவதாக பாரதிதாசன், பாரதியார், மலேசியா திறந்தநிலை பல்கலை, பி.எஸ்.எஸ்., மத்திய அமைப்பு, அழகப்பா பல்கலை பெயர்களில் விளம்பரப்படுத்தி மாணவர்களை சேர்த்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.