''உயர் கல்வி நிறுவனங்கள் திறன் மேம்பாட்டு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். சமுதாய சீர்கேடுகளுக்கு கல்வி தான் தீர்வு,'' என கேரள கவர்னர் சதாசிவம் வலியுறுத்தினார். மதுரையில் அகில இந்திய கிறிஸ்தவ உயர்கல்வி கழக பொன்விழா நிறைவு விழா அமெரிக்கன் கல்லுாரியில் நேற்று நடந்தது. சென்னை கிறிஸ்தவ கல்லுாரி முதல்வர் அலெக்சாண்டர் ஜேசுதாஸ், அமெரிக்கன் கல்லுாரி முதல்வர் தவமணி கிறிஸ்டோபர் வரவேற்றனர்.
இதில் கவர்னர் சதாசிவம் பேசியதாவது: கேரள கவர்னராக பொறுப்பேற்றவுடன் அங்குள்ள 14 பல்கலை துணைவேந்தர்களை அழைத்து தரமான கல்வி அளிப்பது தொடர்பாக ஆலோசித்தேன். இந்தாண்டு முதல் சிறந்த பல்கலைக்கான விருது அறிவிக்கப்பட்டு, மாநில அரசால் 5 கோடி ரூபாய் பரிசு வழங்கப்படவுள்ளது. சமுதாய சீர்கேடுகளுக்கு கல்வி தான் தீர்வு. தற்போது திறன் மேம்பாட்டு கல்விக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உயர் கல்வியில் பெரிய மாற்றம் ஏற்பட்டு வருகிறது. மாணவர்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டால் தான் வேலைவாய்ப்பு கிடைக்கும், என்றார்.
ராஜ்யசபா துணைத் தலைவர் குரியன் பேசியதாவது:அன்றைய காலத்தில் தரமான கல்வியை நோக்கமாக கொண்டு செயல்பட்டன. ஆனால் இன்று வணிக ரீதியாக மாறிவிட்டன. மருத்துவ இடங்கள் கோடிக்கணக்கான ரூபாய்க்கு ஏலம் விடப்படுகின்றன. சிறுபான்மையினருக்கு அரசு வழங்கும் சலுகைகளை வியாபார நோக்கத்திற்கு பயன்படுத்தக்கூடாது, என்றார். வி.ஐ.டி., பல்கலை வேந்தர் விஸ்வநாதன், மதுரை பிஷப் அந்தோணி பாப்புசாமி உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment