தமிழகத்தில் பொறியியல், மருத்துவம், பி.எட்., நர்சிங் போன்ற படிப்புகளுக்கான முதலாம் ஆண்டு வகுப்புகள் துவங்கிவிட்ட நிலையில், வங்கிகள் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க மறுப்பதாக புகார் எழுந்துள்ளன.
பிளஸ் 2 முடித்தவுடன், மேற்படிப்பு படிக்க வசதியற்ற மாணவர்களுக்கு, பொதுத்துறை வங்கிகள் கல்விக்கடன் வழங்கி வருகின்றன. படிப்பை பொறுத்து கடன் அளவு மாறுபடுகிறது. இந்நிலையில், மாணவர்கள் கல்விக்கடன் பெற தேவையான விதிமுறைகளை பூர்த்தி செய்தும், வங்கிகள் கடன் வழங்க மறுத்து வருவது தெரிய வந்துள்ளது.
பொதுத்துறை வங்கிகளின் மேலிட நிர்வாகம், கல்விக்கடன் வழங்குவதை தவிர்க்குமாறு வாய்மொழி உத்தரவு பிறப்பித்துள்ளதே இதற்கு காரணம் என, வங்கி கிளை மேலாளர்கள் கூறுகின்றனர். இதனால், அவர்கள் கடன் கேட்டு வரும் மாணவர்களிடம் ஏதாவது காரணத்தை கூறி கடன் வழங்க மறுக்கின்றனர்.
வலுவற்ற அமைப்பு ஒவ்வொரு ஆண்டும் இது போன்ற பிரச்னைகளை மாணவர்கள் எதிர்கொள்வது வழக்கமாகி விட்டது. ஆனால், வங்கிகள் மீதான புகார்களை விசாரிக்க, தற்போது இருக்கும் வங்கிகள் குறைதீர்ப்பு ஆணையம் வலுவற்றதாக உள்ளது. அதன்படி, புகார்தாரர் குறிப்பிட்ட வங்கிகளுக்கு நேரடியாக தங்கள் புகாரினை அனுப்பிவிட்டு, ஒரு மாதம் வரை காத்திருக்க வேண்டும்.
வங்கிகளின் பதில் திருப்தி அளிக்கவில்லை எனில் மேல்முறையீடு செய்து விட்டு மீண்டும் காத்திருக்க வேண்டும். தமிழகத்தில், 2013-14ல் 8 ஆயிரத்து 775 பேர் பயன்படுத்திய இந்த புகார் அமைப்பை, 2014-15ல் 8 ஆயிரத்து 285 பேர் பயன்படுத்தியுள்ளனர்.
பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை, ஒவ்வொரு ஆண்டும் குறைந்து வருவது, இந்த அமைப்பின் மீது மக்கள் நம்பிக்கையை இழந்து விட்டதை காட்டுகிறது.கல்விக் கடன் புகார்களுக்கு, இந்த முறை சரிவராது என்பதால், அதற்கென பிரத்யேக டோல் ப்ரீ எண்ணை வெளியிட வேண்டும் என்பது மாணவர்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.
மாணவர்களிடம் மட்டும் கண்டிப்பு வங்கிகள் கடன் வழங்க மறுப்பது குறித்து, அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச்செயலாளர் வெங்கடாச்சலம் கூறியதாவது:
தமிழ்நாட்டில் மட்டும் 16 ஆயிரத்து 500 கோடி ரூபாய் வராக்கடனாக உள்ளது, இதில் கல்விக்கடன், ஆயிரத்து 500 கோடி ரூபாய் மட்டுமே. பொறியியல் பட்டதாரிகள் வேலை கிடைக்காத காரணத்தால், கடனை திருப்பி செலுத்தமுடியாத நிலையில் உள்ளனர்.
மாணவர்களிடம் காட்டும் கண்டிப்பினை, நாடு முழுவதும் 13 லட்சம் கோடி கடன் வைத்திருக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் வங்கிகள் காட்டுவதில்லை, என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.