குழந்தைக் கடத்தல்... எங்கோ, யாருக்கோ நடக்கும் விஷயமல்ல. ‘திருச்சியில் விளையாடிட்டு இருந்த ஒரு குழந்தை திடீர்னு காணாமப் போயிடுச்சாம்’ என்று நாளிதழ் செய்தியாக நாம் கடக்கும் சம்பவத்துக்குப் பின் இருப்பது, திருச்சியளவில் அடங்கக்கூடிய ஒரு குற்றச்செய்தி அல்ல. உண்மையில், அது மாநிலம், தேசம், சர்வதேசம் என்று சங்கிலித் தொடராக இயங்கும் ஒரு மிகப்பெரிய கடத்தல் நெட்வொர்க்!
சில வருடங்களுக்கு முன் குழந்தைக் கடத்தல் பின்னணியை மனம் அதிரச் சொன்ன ‘6 மெழுகுவர்த்திகள்’ திரைப்படம் நினைவிருக்கலாம். சில வாரங் களுக்கு முன், நடிகர் பார்த்திபன் சென்னை காவல் ஆணையரிடம் குழந்தைக் கடத்தல் சம்பவம் தொடர்பாக புகார் அளித்தார்; குழந்தைகள் கடத்தலுக்கு எதிராக, ‘அபயம்’ அமைப்பு உருவானது. தவிர, ஏராளமான தன்னார்வ அமைப்புகள் இந்தப் பிரச்னைக்காக குரல் கொடுத்துவருகின்றன. காரணம், அந்தளவுக்குப் பரவலாக உங்கள் ஊர்களிலும், தெருக்களிலும் ஊடுருவியுள்ளது இந்த நெட்வொர்க். அதன் மாயக்கரங்களில் எந்தக் குழந்தையும் சிக்கலாம் என்பதே நிலை... உங்கள் குழந்தை உட்பட!
தமிழகத்தில் கடந்த ஆண்டில் மட்டும் 600-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். இதில் 300-க்கும் மேற்பட்டோர் பெண் குழந்தைகள். தமிழகத்தில் கடந்த மூன்று மாதங்களில் மட்டும் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடத்தப்பட்டுள்ளனர். சராசரியாக ஒரு நாளைக்கு இரண்டு குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.
குழந்தைகளை யார் கடத்துகிறார்கள்... எப்படிக் கடத்துகிறார்கள்... எதற்காக கடத்துகிறார்கள்? அதிர்ச்சியளிக்கும் பின்னணியை எடுத்துரைத்தார், குழந்தைகள் உரிமைகளுக்கான ‘தோழமை’ அமைப்பின் இயக்குநர் ஆர்.தேவநேயன்.
எந்த வீட்டுக் குழந்தையும் கடத்தப்படலாம்!
‘‘குழந்தைகள் கடத்தல் இன்றைய சூழலில் மிக முக்கியமான பிரச்னையாக, பரவலான குற்றமாக மாறிவிட்டது என்பது சுடும் நிஜம். பிளாட்ஃபாரங்களில் வசிக்கும் குடும்பத்துப் பிள்ளைகளும், அரசு மருத்துவ மனைகளில் பிரசவிக்கப்படும் குழந்தைகளும்தான் அதிகமாகக் கடத்தப்படுகிறார்கள். தவிர, நடுத்தர வர்க்கத்தில் இருந்து தொழிலதிபர் வீட்டுக் குழந்தைகள் வரை யாரும் கடத்தப்படலாம் என்பதும் நிதர்சனம்.
எப்படிக் கடத்தப்படுகிறார்கள்?
பிளாட்ஃபாரக் குழந்தைகள் பெரும்பாலும் இரவு நேரத்தில், பெற்றோர் அயர்ந்து தூங்கும்போது லாகவ மாகக் கடத்தப்படுகின்றனர். அரசு மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள் கடத்தப்படுவதில் அங்கு பணியாற்றும் செவிலியர்களில் இருந்து கடைநிலை ஊழியர்கள்வரை பலர் உடந்தையாக இருக்கிறார்கள்.
நடுத்தரக் குடும்பத்தினர், தொழிலதிபர்கள் வீட்டுக் குழந்தையைக் கடத்தத் திட்டமிட்டுவிட்டால்... அந்தக் கும்பல் அக்குழந்தையின் நடமாட்டங்களை பல மாதங்களாகக் கண்காணிக்கிறது. அது எப்போது பள்ளிக்குச் செல்கிறது, திரும்புகிறது, அழைத்துச் செல்பவர் யார், குழந்தை எப்போது தனியாக இருக்கும், விடுமுறை நாட்களில் எங்கு விளையாடச் செல்லும் என்று தெரிந்துகொண்டு, ஒருவரை இயல்பாக அந்தக் குழந்தையுடன் பழகவிட்டு, தகுந்த நேரத்தில் கடத்திவிடுகிறார்கள்.
ஒரு குழந்தை கடத்தப்பட்ட செய்தி வருகிறதே தவிர, அது மீட்கப்பட்டதா என்ற அப்டேட்கள் பெரும்பாலும் வருவதில்லை. கடத்தப்படும் 100 குழந்தைகளில், 10 - 20 குழந்தைகள்தான் நல்ல நிலை யிலோ, சேதாரங்களுடனோ மீட்கப் படுகின்றனர். மற்ற குழந்தைகளின் நிலை அறியப்படாதது. கடத்தல் காரர்களை அடையாளம் கண்டு விடுவதால், கடத்தப்பட்ட பெரும்பாலான குழந்தைகள் கொல்லப்பட்டுவிடுகின்றனர்.
எதற்காகக் கடத்துகிறார்கள் குழந்தைகளை?
சட்டத்துக்குப் புறம்பான முறையில் தத்தெடுத்தல், பிச்சை எடுத்தல், குழந்தை தொழி லாளர்கள், பாலியல் குற்றங்கள், உடலுறுப்பு திருட்டு, நரபலி என பல காரணங்களுக்காக குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.
கடத்தப்படும் பச்சிளம் குழந்தைகளை, தங்கள் பிள்ளை கள் போல மடியில் கட்டிக்கொண்டு பிச்சை எடுக்கிறது ஒரு கும்பல். ஏராளமான சிக்னல்களில் இந்தக் கும்பல் பெருகிக்கொண்டே வருகிறது. அந்தக் குழந்தைகளுக்கு போதையேற்றும் மருந்தைக் கொடுத்து, எப்போதும் மயக்க நிலையிலேயே வைத்திருப்பார்கள். மயங்கிய குழந்தையைச் சுமந்தபடி, கையேந்தி, பொதுமக்களின் பரிதாபத்தை தூண்டி, பிச்சையெடுப்பது இந்த கும்பலின் தொழில். ஒரு வாரம் சோழிங்கநல்லூர், அடுத்த வாரம் தாம்பரம் என இடம் மாற்றிக்கொண்டே இருப்பார்கள். இது ஒரு தொடர்ச்சியான நெட்வொர்க்.
பச்சிளம் குழந்தை மற்றும் 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள் சட்டத்துக்கு புறம்பான தத்தெடுத்தலுக்காகவும் கடத்தப் படுகின்றனர். குறிப்பாக, இந்தத் தேவையில் ஆண் குழந்தைகளுக்குப் பெரிய டிமாண்ட் இருக்கிறது.
கடத்தப்பட்ட 5 - 10 வயதுடைய குழந்தைகளை மாநில எல்லைகளில் சட்ட விரோத செயல்பாடுகளில் பயன்படுத்துகின்றனர். அதாவது, மாநில எல்லை களில் உள்ள சோதனைகளில் இருந்து தப்பிக்க, கடத்தப் பட்ட குழந்தைகளின் உடைகளுக்குள் போதை பொருட்களை வைத்து கடத்து கின்றனர். இதே வயதுடைய குழந்தைகளைக் கடத்தி, கொத்தடிமைகளாகவும் பயன்படுத்துகின்றனர்.
10 வயதுக்குட்பட்ட குழந்தைகளைக் கடத்தி நரபலி போன்ற செயல்களுக்குப் பயன்படுத்துகின்றனர். மற்ற கடத்தல்களைக் காட்டிலும், இதற்காக கடத்தப்படுவது குறைவுதான்.
10 - 16 வயதுடைய சிறுமிகளை மையப்படுத்திய கடத்தல்கள் பெரும்பாலும், பாலியல் தொழிலுக்காகத் தான். இந்தச் சிறுமிகளை மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களில் உள்ள சிவப்பு விளக்கு பகுதிகளில் செயல்படும் பாலியல் தொழிலுக்கும், ஆபாச படங்களை எடுக்கவும் பயன்படுத்து கிறார்கள்.
வயது வரம்பின்றி உடலுறுப்பு திருட்டுக்காகவும் பெருமளவில் குழந்தைகள் கடத்தப்படுகின்றனர்.
தொழிலதிபர்களின் குழந்தைகளைக் கடத்தி பணம் பறிக்கும் கும்பலும் உண்டு. சென்னை `ஈசிஆர்', `ஓஎம்ஆர்' மற்றும் தமிழகத்தின் தொழில் நகரங்களில் ஏராளமான ரியல் எஸ்டேட் பிரச்னைகளுக்காகவும், குழந்தைகளைக் கடத்தி காரியத்தை சாதிக்கும் கும்பல்கள் ஏராளமாகச் செயல்படுகின்றன.
குழந்தைக் கடத்தல் தொடர்ந்து நடந்துகொண்டேதான் இருக்கிறது. பெரும்பாலான குழந்தைகளை சிறுவயதிலேயே கடத்திவிடுவதால், அவர்கள் தங்களின் பெற்றோர் மற்றும் உறவினர்களை அடையாளம் காண முடியா மலும், தனக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமலும் சூழ்நிலைக்கு தகுந்தாற்போல வாழப் பழகிவிடுகின்றனர்’’ என்கிறார் தேவநேயன்.
இன்னும், பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் பாதுகாப்பை பலப்படுத்துவ தற்கான அறிவுரைகள், குழந்தை கடத்தலை தடுப்பதற்கான அரசு நிர்வாக அமைப்பு பரிந்துரை, குழந்தைகள் கடத்தப்பட்டால், தாமதிக்காமல் புகார் அளிக்கவேண்டிய தளங்கள், தத்தெடுப்புக்கான சட்ட விதிமுறைகள், குழந்தை கடத்தல் கும்பலுக்கான சட்டப்பூர்வ தண்டனை...
குழந்தை கடத்தலில் தமிழகம்..!
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, நெதர்லாந்து போன்ற வெளிநாடுகளுக்கும், இந்தியாவில் மஹாராஷ்ட்ரா, கொல்கத்தா, பீகார், சத்தீஸ்கர் போன்ற மாநிலங்களுக்கும், தமிழகத்தில் சென்னை, கிருஷ்ணகிரி, வேலூர், சேலம் போன்ற நகரங்களுக்கும் குழந்தைகள் அதிகமாக கடத்தப்படுகின்றனர். குழந்தைகள் கடத்தலில் மஹாராஷ்ட்ரா, உத்தரப்பிரதேசம் மாநிலங்களுக்கு அடுத்த இடத்தில் தமிழகம் உள்ளதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவிக்கிறது.
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழகத்தில் நடந்த குழந்தை கடத்தல்கள்:
2014 - 441
2015 - 656
2016 (முதல் மூன்று மாதங்களில்) - 58
கடத்தல் டார்கெட் இடங்கள்!
ஒரு நாளில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் பிறக்கும் அரசு மருத்துவமனை களில்தான் குழந்தை கடத்தல் சம்பவங்கள் அதிகளவில் நடைபெறுகின்றன. தவிர, ரயில்நிலையங்கள், பேருந்து நிலையங்கள், கோயில்கள் போன்ற மக்கள் நெருக்கம் அதிகமாக இருக்கும் இடங்களில், கடத்தல் கும்பல் டீமாக செயல்பட்டு பிள்ளைகளைக் கடத்துகிறார்கள். தற்போது கோடை வாசஸ்தலங்கள்தான் அவர்களின் டார்கெட் இடங்கள். இந்தச் சமயத்தில் ஊட்டி, கொடைக்கானல் போன்ற பகுதிகளுக்கு சுற்றுலா செல்பவர்கள் தங்களின் குழந்தைகளை பத்திரமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.
கடத்தல் நெட்வொர்க்!
கடத்தப்பட்ட ஒரு குழந்தை, எப்படி கைமாற்றப்படுகிறது என்பதை, குழந்தைகள் நல பாதுகாப்பு அமைப்பைச் சேர்ந்த நண்பர் ஒருவர் சொல்லக் கேட்டபோது, இதயத் துடிப்பு அதிகரித்தது.
‘‘கடத்தப்பட்ட ஒரு குழந்தையானது, ஒரு மணி நேரத்துக்குள் அடுத்த குரூப்புக்கு கைமாற்றப்படும். அடுத்து சில மணி நேரங்களுக்குள் மாநில எல்லையைக் கடந்து சென்றுவிடும். அடுத்தடுத்து பல குரூப்களுக்கு கைமாற்றப்பட்டு, பல மணி நேரங்களில் மெயின் கும்பலிடம் ஒப்படைக்கப்படும். அந்த மெயின் கும்பல், பெரும்பாலும் மும்பை, கொல்கத்தா நகரங்களைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த கடத்தல் பின்னணியில், பல பெரிய வெளிநாட்டு நெட்வொர்க் செயல்படுகின்றன.
ஒவ்வொரு ஆண், பெண் குழந்தையும் அவரவர் வயது, அழகு, உடல் அமைப்பைப் பொறுத்து ரேட் ஃபிக்ஸ் செய்யப்படுகிறார்கள். ஆயிரத்தில் இருந்து பல லட்சம்வரை இந்த ரேட் மாறுபடும். தொழிலதிபர்களின் குழந்தைகளுக்கு, கோடியில் ரேட் பேரம் நடக்கும். கடத்தப்பட்ட எந்த ஒரு குழந்தையையும், ஓராண்டுக்கு மேல் ஒரு இடத்தில் வைத்திருக்க மாட்டார்கள். வெளிநாடுகளுக்குக் குழந்தைகளை கடத்திவிட்டால், 80 - 90% மீட்பது கடினம். இந்த குழந்தைகள் கடத்தல் கும்பலைப் பிடிப்பது அரிதான செயல். அப்படியே ஒரு குரூப் போலீஸிடம் சிக்கினாலும், அடுத்த குரூப்பை காட்டிக்கொடுக்கவே மாட்டார்கள். அதனால்தான் இதுவரை எந்த நெட்வொர்க்கும் மாட்டவில்லை’’ என்கிறார் நண்பர்.
போலீஸ் எச்சரிக்கை !.. (கண்டிப்பாக Share செய்து உதவுங்கள்)
No comments:
Post a Comment