Pages

Wednesday, October 12, 2016

'இ - சேவை' மையத்தில் விண்ணப்பித்தால் அலைபேசியில் எஸ்.எம்.எஸ்., தகவல்

தமிழகம் முழுவதும், 'இ - சேவை' மையங்களில், அரசின் சேவைகளை பெற மனு செய்வோருக்கு, அலைபேசியில், எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பும் நடைமுறை, வரும், 17 முதல், செயல்பாட்டுக்கு வருகிறது. தமிழக அரசின், மின் மாவட்டம் திட்டத்தின் கீழ், பல அரசு திட்டங்கள் மற்றும் சேவைகள், பொதுமக்களுக்கு அவர்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகே, இ - சேவை மையங்கள் மூலமாக வழங்கப்படுகிறது. 


ஜாதிச்சான்று, பிறப்பிடச் சான்று உள்ளிட்ட சான்றிதழ்கள்; ஓய்வூதியங்கள், 'ஆதார்' அட்டை பெறுதல் மற்றும் மின் கட்டணம் செலுத்துதல் உள்ளிட்ட, 100 சேவைகள் வழங்கப்படுகின்றன.இங்கு விண்ணப்பித்தோர், மனு ஏற்கப்பட்டதா; சான்றிதழ் எப்போது கிடைக்கும் என அறிய, இ - சேவை மையங்களுக்கு செல்ல வேண்டி உள்ளது. இதனால், மக்களுக்கு ஏற்படும் சிரமத்தை குறைக்க, அலை பேசி வழியாக, எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பும் திட்டம் துவங்கப்பட உள்ளது.

இது குறித்து, தமிழக தகவல் தொழில் நுட்பத்துறை அதிகாரிகள் கூறியதாவது:இ - சேவை மையங்களில், விண்ணப்பிப்போருக்கு, அவர்களின் அலைபேசிகளுக்கு, மூன்று கட்டங்களாக, எஸ்.எம்.எஸ்., தகவல் அனுப்பப்படும். அதில், விண்ணப்பம் ஏற்கப்பட்ட விபரம்; பெறப்பட்ட சேவை கட்டணம்; நிராகரிக்கப்பட்டால், அதற்கான காரணம்; குறைபாடு இருந்தால், 1800 425 1333, என்ற கட்டணமில்லாத தொலைபேசியை தொடர்பு கொள்ளலாம் என்ற தகவல்கள் இடம்பெறும். இது, கிராமப்புற மக்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும். தமிழகம் முழுவதும் உள்ள, 10 ஆயிரம், இ - சேவை மையங்களிலும், இந்த சேவை, வரும், 17ம் தேதி நடைமுறைக்கு வரும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தகவல் அறியும் சேவை : மனுதாரர்கள் தாங்களாகவே, இ - சேவை மையத்தின் அலைபேசி எண்ணுக்கு, எஸ்.எம்.எஸ்., அனுப்பி, விண்ணப்பம் குறித்த தகவல் அறியும் வசதி, இரண்டு வாரங்களில், நடைமுறைக்கு வருகிறது. 'இதற்காக, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துடன் பேசப்பட்டு வருகிறது; பிரத்யேக எண் விரைவில் அறிவிக்கப்படும்' என, அதிகாரிகள் கூறினர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.