Pages

Saturday, October 15, 2016

பணியிட மாறுதல் கிடைத்தும் பயனில்லை : விடுவிப்பு உத்தரவு கிடைக்காமல் காத்திருக்கும் 5 மாவட்ட ஆசிரியர்கள்

தமிழக அரசுப் தொடக்கப் பள்ளி, உயர்நிலை மற்றும் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் பணியிட மாறுதல் வழங்கப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான பணியிட மாறுதல் கவுன்சலிங் ஆகஸ்ட் மாதம் நடந்தது. தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 21ம் தேதி கவுன்சலிங் நடந்தது. ஆன்லைன் மூலம் நடந்த இந்த கவுன்சலிங்கில் பங்கேற்று விரும்பிய  இடங்களுக்கு மாறுதல் கேட்ட ஆசிரியர்களுக்கு ஆகஸ்ட் 22ம் தேதியே பணியிட மாறுதல் உத்தரவுகள் வழங்கப்பட்டன.


விரும்பிய இடங்களுக்கே பணியிட மாறுதல் கிடைத்த மகிழ்ச்சியில் இருந்த ஆசிரியர்கள் உடனடியாக தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சேர்ந்தனர். ஆனால் திருவண்ணாமலை, காஞ்சிபுரம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு மட்டும் இன்னும் விடுவிப்பு உத்தரவுகள் கிடைக்கவில்லை. அதனால் அந்த மாவட்ட ஆசிரியர்கள் தங்களுக்குரிய பணியிடங்களில் சேரமுடியாமல் உள்ளனர்.

பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள், அந்தந்த மாவட்டத்தில் உள்ள உதவி தொடக்க கல்வி அலுவலர்களை சந்தித்து முறையிட்டனர். தமிழக உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு வந்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருப்பதால் விடுவிக்க முடியாது. தேர்தல் முடிந்த பிறகுதான் விடுவிப்பு உத்தரவு  வழங்கப்படும் என்று தெரிவித்துவிட்டனர். ஆனால், உள்ளாட்சி அமைப்பு தேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், தேர்தல் நடத்தை விதிகளும் ரத்தாகிவிட்டது. 

எனவே, விடுவிப்பு உத்தரவு வழங்க வேண்டும் என்று இடைநிலை ஆசிரியர்கள் கல்வி அதிகாரிகளிடம் கேட்டனர். உதவி தொடக்க கல்வி அதிகாரியோ, மாவட்ட கல்வி அதிகாரியை பாருங்கள் என்று கூறுகிறார். மாவட்ட கல்வி அதிகாரியை சந்தித்தால், இயக்குநரை சந்தியுங்கள் என்று ஆசிரியர்களிடம் அதிகாரிகள் தெரிவித்து வருகின்றனர்.  தொடக்க கல்வி இயக்குநரை கடந்த வாரம் ஆசிரியர்கள் சந்தித்து முறையிட்டனர். அரசிடம் இருந்து உத்தரவு வரவில்லை. வந்த பிறகுதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இயக்குநர் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர். இதனால் 5 மாவட்டங்களை சேர்ந்த இடைநிலை ஆசிரியர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்களில் சேர முடியாமல் தவித்து வருகின்றனர். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.