Pages

Monday, October 24, 2016

சித்தா கலந்தாய்வு நடக்குமா?வரும் 31ல் முடியுது அவகாசம்

சித்தா, ஆயுர்வேத படிப்புகளுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து, நான்கு மாதங்களாக தவம் கிடக்கின்றனர். ஒரு வாரத்தில், சேர்க்கை அவகாசம் முடிவதால், கலந்தாய்வு நடக்குமா என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது.தமிழகத்தில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை, பாளையங்கோட்டை என, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 356 இடங்கள்; 21 சுயநிதிக் கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன; இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர். 


விண்ணப்பித்து, நான்கு மாதங்களுக்கு மேலாகியும், தர வரிசை பட்டியல் வெளியிடப்படவில்லை. வழக்கமாக, அக்., இறுதிக்குள் கலந்தாய்வு முடிந்து, கல்லுாரிகள் துவங்க வேண்டும்; இதுதான் விதிமுறை. இதன்படி, அவகாசம் ஒரு வாரத்தில் முடிகிறது. அதனால், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு நடக்குமா என, விண்ணப்பித்தோர் புலம்புகின்றனர். தனியார் கல்லுாரிகளில் இடங்கள் நிரம்ப வசதியாக, இந்திய மருத்துவத் துறை அதிகாரிகள், காலம் தாழ்த்துகின்றனரோ என்றும் சந்தேகம் எழுப்பி உள்ளனர்.

இதுகுறித்து, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்குனரக அதிகாரிகள் கூறியதாவது:கல்லுாரிகளில் ஆய்வு நடத்தி, மாணவர் சேர்க்கைக்கு, 'ஆயுஷ்' கவுன்சில், அனுமதி அளிக்கும். ஆய்வுகள் முடிவடையாததால், மாணவர் சேர்க்கை அனுமதி இன்னும் கிடைக்கவில்லை; அதனால், கலந்தாய்வு நடத்த முடியவில்லை. மாணவர் சேர்க்கை நடத்தி முடிக்க, இம்மாதம் வரை அவகாசம் உள்ளது. அதற்குள் அனுமதி கிடைக்குமா என்று தெரியவில்லை. முறையான அனுமதி கிடைக்காத நிலையில், மாணவர் சேர்க்கைக்கான அவகாசம் நீட்டிக்கப்படும். அடுத்த மாதம் கலந்தாய்வு நடக்க வாய்ப்பு உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.