Pages

Monday, September 19, 2016

ஊரக உள்ளாட்சி தேர்தல் இரு கட்டமாக நடக்குமா?

'வாக்காளர்களுக்கு ஏற்படும் குழப்பத்தை தவிர்க்க, ஊரக உள்ளாட்சி தேர்தலை, இரு கட்டங்களாக நடத்த வேண்டும்' என்ற, எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தமிழகத்தில், அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. ஊரகம், நகர்ப்புறம் என, இரண்டு வகையான உள்ளாட்சி அமைப்பு கள் செயல்படுகின்றன. ஊரக உள்ளாட்சியில், ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் உள்ளிட்ட பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கிறது. வாக்காளர்கள் நான்கு ஓட்டுகளை அளித்து, பிரதிநிதிகளை தேர்வு செய்ய வேண்டும். 

நகர்ப்புற உள்ளாட்சிகளில், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி கவுன்சிலர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடக்கிறது. நகர்ப்புற வாக்காளர்கள், ஒரு ஓட்டு போட்டால் போதும் என்பதால், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில்,ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்பட உள்ளன. 
ஊரக உள்ளாட்சி தேர்தலில், ஓட்டு சீட்டுகள் பயன்படுத்தப்படும். மாவட்ட கவுன்சிலர், ஒன்றிய கவுன்சிலர் பதவிகளுக்கு மட்டுமே, கட்சி ரீதியான தேர்தல் நடக்கும். 

ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு, சுயேச்சை சின்னங்கள் தான். நான்கு ஓட்டுகளை பதிவு செய்யும் போது, வாக்காளர்களுக்கு குழப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. 
இதைத் தவிர்க்க, ஊராட்சி தலைவர், வார்டு உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தலை ஒரு நாளும், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட கவுன்சிலர் பதவிகளுக் கான தேர்தலை மற்றொரு நாளும் நடத்த வேண்டும் என, சுயேச்சை வேட்பாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
இதுகுறித்து, தேர்தலில் போட்டியிட உள்ள சுயேச்சை ஒருவர் கூறியதாவது: உள்ளாட்சி தேர்தலை நடத்த, 183 கோடி ரூபாயை அரசு ஒதுக்கி உள்ளது. மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர்களுக்கான நேரடி தேர்தல் ரத்தால், அரசு ஒதுக்கிய நிதி மிச்சமாகும். 

எஞ்சிய நிதியை பயன்படுத்தி, ஊரக உள்ளாட்சி தேர்தலை இரண்டு கட்டமாக நடத்த வேண்டும்; அப்படி செய்தால், சின்னங்கள் தொடர்பான குழப்பம் குறையும். இவ்வாறு அவர் கூறினார்

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.