Pages

Monday, September 26, 2016

அங்கீகாரமற்ற படிப்புகளை நடத்துகிறதா இந்திய மருத்துவ சங்கம்:மாணவர்கள் அதிர்ச்சி

மதுரை:இந்திய மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை பயிற்று விப்பதாக இந்திய மருத்துவ சங்கம் (ஐ.எம்.ஏ.) மீது புகார் எழுந்துள்ளன. இந்திய மருத்துவ கவுன்சில் நாடு முழுவதும் உள்ள மருத்துவ கல்வி நிறுவனங்களின் தரத்தை பரிசோதித்து அவற்றுக்கு அனுமதி அளிக்கிறது. கல்வி நிறுவனங்களில் கற்றுக்கொடுக்கப்படும் ஒவ்வொரு பாடப் பிரிவுகளுக்கும் அனுமதி பெற வேண்டும். அனுமதி இன்றி இயங்கும் கல்வி நிறுவனங்கள் மீதும், அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை கற்றுக் கொடுக்கும் நிறுவனங்களின் மீதும் இந்திய மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுக்கிறது.


இந்நிலையில், இந்திய மருத்துவ சங்கத்தின் தமிழ்நாடு கிளை, மருத்துவ கவுன்சில் அனுமதியின்றி அங்கீகாரமற்ற சான்றிதழ் படிப்புகளை பயிற்றுவிப்பதாக புகார் எழுந்துள்ளன. இதனால், ஏற்கனவே ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து சான்றிதழ் படிப்பை முடித்தவர்களும், தற்போது பயின்று வருவோரும் அதிர்ச்சியடைந்து உள்ளனர்.

டாக்டர் ஒருவர் கூறியதாவது: சங்கம் சார்பில் நடத்தப்படும் பாராமெடிக்கல் பட்டய படிப்புகள், டாக்டர்களுக்கான 'ஸ்பெஷாலிட்டி' படிப்புகள் உள்ளிட்டவை அங்கீகாரமற்றவை. அரசு வேலைகளுக்கும் இவை கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. சில டாக்டர்கள், 'ஸ்பெஷாலிட்டி' சான்றிதழை வைத்துக்கொண்டு அது சம்பந்தப்பட்ட சிகிச்சையில் ஈடுபடுகின்றனர்.

சான்றிதழ் படிப்புகளாக நடத்த அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். அவ்வப்போது முளைக்கும் போலி கல்வி நிறுவனங்கள் மீது மருத்துவ கவுன்சில் நடவடிக்கை எடுப்பது வழக்கம். ஆனால் இந்திய மருத்துவ சங்கமே, அங்கீகாரமற்ற படிப்புகளை நடத்தி வருவது டாக்டர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது, என்றார்.

ஸ்பெஷலிஸ்ட்கள் மீது நடவடிக்கை

இந்திய மருத்துவ சங்க மாநில செயலர் முத்துராஜன் கூறியதாவது: டாக்டர்களுக்கு 'பெல்லோஷிப்' எனப்படும் பயிற்சியை மட்டுமே அளிக்கிறோம். படிப்பில் சேரும் முன்பே, இது தமிழக அரசு மற்றும் மருத்துவ கவுன்சிலால் அங்கீகரிக்கப்பட்ட பட்ட படிப்பு அல்ல என்ற விஷயத்தை அவர்களிடம் தெரிவிக்கிறோம். அதனை பயன்படுத்தி தங்களை 'ஸ்பெஷலிஸ்டாக' அறிவித்துக் கொள்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

செவிலியர் உள்ளிட்ட பணிகளின் தேவையை கருத்தில் கொண்டே சில பாராமெடிக்கல் பட்டயப் படிப்புகள் நடத்தப்படுகின்றன. படிப்பிற்குப் பின் அவர்கள் தனியார் மருத்துவமனைகளில் வேலை செய்யலாம், என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.