Pages

Thursday, September 8, 2016

அரசு ஊழியர்களுக்கு தீபாவளி 'போனஸ்' : உள்ளாட்சி தேர்தலால் முன்னதாக பேச்சு

உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், தீபாவளி போனஸ் சம்பந்தமாக, தொழிற்சங்கங்களுடன், முன்கூட்டியே பேச்சு நடத்த, அரசு நிறுவனங்கள் முடிவு செய்து உள்ளன. தமிழக அரசுக்கு சொந்தமான, தமிழ்நாடு மின் வாரியம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகம், அரசு போக்குவரத்து கழகங்கள் உள்ளிட்ட நிறுவனங்களில், அதிகாரிகள் தவிர்த்து, மற்ற பிரிவுகளில், 3.75 லட்சம் பேர் பணிபுரிகின்றனர்.
இவர்களுக்கு, தீபாவளி பண்டிகையின் போது, தமிழக அரசு, போனஸ் வழங்கி வருகிறது. ஒவ்வொரு அரசு நிறுவனமும், போனஸ் தொகையை நிர்ணயம் செய்ய, அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களுடன் பேச்சு நடத்தும். தொழிற்சங்கங்களின் கோரிக்கை, அரசின் நிதித்துறை வரை செல்லும். பரிசீலனைகள் முடிந்ததும், போனஸ் குறித்து, முதல்வர் அறிவிப்பார். இந்த ஆண்டு தீபாவளி, அக்., 29ல் வருகிறது. உள்ளாட்சி தேர்தலும், அதே மாதம் நடக்க உள்ளதால், முன்கூட்டியே, போனஸ் பேச்சு நடத்தப்பட உள்ளது.

இதுகுறித்து, தமிழக நிதித்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: கடந்த ஆண்டு, அரசு நிறுவன ஊழியர்களுக்கு, 8.33 சதவீதம் போனஸ்; 11.67 சதவீதம் கருணை தொகை என, மொத்தம், 20 சதவீதம் போனஸ் வழங்கப்பட்டது. இதன்படி, 3.76 லட்சம் பேருக்கு, 242 கோடி ரூபாய் வழங்கப்பட்டது. நடப்பாண்டு, போனஸ் தொகை உயர வாய்ப்பு உள்ளது. வழக்கமாக, தீபாவளிக்கு, இரண்டு வாரங்களுக்கு முன், போனஸ் பேச்சு நடக்கும்; உள்ளாட்சி தேர்தல் நடக்க உள்ளதால், இம்மாத இறுதியிலே பேச்சு நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.