Pages

Monday, September 5, 2016

பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு: 39 பேருக்கு உடனடி ஆணை

திருநெல்வேலியில் சனிக்கிழமை நடைபெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வில் 39 பேருக்கு மாறுதல் நியமன ஆணை உடனடியாக வழங்கப்பட்டது. திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிகளில் பயிலும் அனைத்து வகை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு பாளையங்கோட்டை சாராள் தக்கர் பள்ளியில் நடைபெற்று வருகிறது. பட்டதாரி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு சனிக்கிழமை நடைபெற்றது. தமிழ், ஆங்கிலம், கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடங்களைச் சேர்ந்த ஆசிரியர்களின் உள்மாவட்ட மாறுதல் கலந்தாய்வு நடைபெற்றது.


இதில், மாவட்டம் முழுவதும் இருந்து 306 ஆசிரியர், ஆசிரியைகள் கலந்து கொண்டனர். இதுவரை ஆன்-லைன் முறையில் நடைபெற்ற கலந்தாய்வு சனிக்கிழமை மட்டும் ஆப்-லைன் முறையில் நடைபெற்றது.

ஏனெனில், பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிடங்கள் பணிநிரவல் முறையில் பூர்த்தி செய்யப்பட்டிருந்ததால் விடுபட்ட இடங்களை அந்தந்த மாவட்டத்தில் உள்ள பள்ளிக் கல்வித் துறை மூலமே தயார் செய்யப்பட வேண்டியிருந்தது. எனவே, உள்மாவட்ட மாறுதல் கலந்தாய்வு மட்டும் அந்தந்த மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களைச் சேகரித்து அவர்களையே நடத்த பள்ளிக் கல்வித்துறை அனுமதியளித்திருந்தது. இதன்படி திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களை சேகரித்து பட்டியல் தயார் செய்திட ஒவ்வொரு பாட வாரியாக தனியாகக் குழு அமைக்கப்பட்டது.

முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் தலைமையில் அமைக்கப்பட்டிருந்த இக் குழுவினர், காலிப் பணியிட விவரங்களைச் சேகரித்து அறிவிப்பு பலகையில் வெளியிட்டனர். இதில் ஆசிரியர்கள் தங்களுக்குரிய விருப்பப் பணியிடங்களைத் தேர்வு செய்தனர். ஆங்கிலம், கணிதப் பாடங்களைத் தவிர்த்து இதர பாட ஆசிரியர்களுக்கு மட்டும் காலிப் பணியிடங்கள் இருந்தன. இதில் தமிழ் ஆசிரியர்கள் 54 பேர் கலந்து கொண்டனர். 14 பேருக்கு மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. அறிவியல் ஆசிரியர்கள் 127 பேர் கலந்து கொண்டனர். 8 பேருக்கு பணி உத்தரவு வழங்கப்பட்டது. சமூக அறிவியல் ஆசிரியர்கள் 49 பேர் கலந்து கொண்டதில் 11 பேர் பணிமாறுதல் உத்தரவு பெற்றனர்.

மனமொத்த மாறுதல் மூலம் 8 பேருக்கு இடமாறுதல் உத்தரவு வழங்கப்பட்டது. இந்த கலந்தாய்வில் 39 பேருக்கு பணிநியமன மாறுதல் உத்தரவுகளை முதன்மைக் கல்வி அலுவலர் இரா. சுவாமிநாதன் வழங்கினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.