Pages

Friday, September 2, 2016

11வது புத்தகக் கண்காட்சி மதுரையில் இன்று துவக்கம் : செப்.12 வரை நடக்கிறது

மதுரையில் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசி) சார்பில், 11வது புத்தகக் கண்காட்சி இன்று (செப்., 2) துவங்கி, 12ம் தேதி வரை தமுக்கம் மைதானத்தில் நடக்கிறது. மொத்தம், 250 ஸ்டால்களில் ஐந்து லட்சம் தலைப்புகளில், புத்தகங்கள் இடம் பெறுகின்றன. நாடு முழுவதும் உள்ள பதிப்பாளர்களின் புத்தகங்கள் மற்றும் மாணவர், சிறுவர்களுக்கான புத்தகங்கள் கிடைக்கும். தினமும் மாலை 6:00 முதல் இரவு 9:00 மணி வரை பேச்சாளர்கள், எழுத்தாளர்கள் பங்கேற்கும் நிகழ்ச்சிகள் நடக்கின்றன. கண்காட்சி, காலை 11:00 முதல் இரவு 9:00 மணி வரை நடக்கும்; அனுமதி இலவசம்.


'பபாசி' செயலர் புகழேந்தி கூறியதாவது: கடந்த புத்தகக் கண் காட்சியை 10 லட்சம் பேர் பார்வையிட்டனர். இந்த ஆண்டு கூடுதலாக பார்வையாளர்கள் வரலாம். கடந்த முறை மூன்று கோடி ரூபாய்க்கு புத்தகங்கள் விற்றன. இந்த ஆண்டும் கூடுதலாக விற்க வாய்ப்பு உள்ளது. மாணவர்களின் திறமையை வெளிக்கொணர பேச்சு, கட்டுரைப் போட்டி நடத்தி பரிசு வழங்கப்படும்.புத்தகங்கள் 10 சதவீத தள்ளுபடியில் வழங்கப்படும். மாணவர்கள் பார்வையிட, கல்வி அதிகாரிகளை கேட்டு உள்ளோம். சிட்டி யூனியன் வங்கியின் தானியங்கி பணம் எடுக்கும் வசதி, குடிநீர், சுகாதார வசதிகள் செய்யப்பட்டுள்ளன. இன்றைய தலைமுறையினரிடம் புத்தகம் படிக்கும் பழக்கம் உள்ளது. ஈரோடு, கோவை என அடுத்தடுத்து கண்காட்சி நடத்திய போதும், வாசகர்களின் எண்ணிக்கை குறையவில்லை. சென்னை, கோவை, மதுரையில் 'பபாசி' சார்பிலும், மற்ற இடங்களில் தனியாருடன் இணைந்தும் புத்தகக் கண்காட்சி நடத்தப்படுகிறது என்றார். சர்வோதய இலக்கியப் பண்ணை நிர்வாகி புருசோத்தமன், நிர்வாகிகள் உடனிருந்தனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.