ஊத்தங்கரை அருகே, அரசு தொடக்கப்பள்ளியில் போதிய ஆசிரியர்களை நியமிக்க வலியுறுத்தி, பள்ளி மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அடுத்த நொச்சிப்பட்டியில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. ஒன்றாம் வகுப்பு முதல், ஐந்தாம் வகுப்பு வரை இந்த பள்ளியில், 67 மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர். இந்த பள்ளி தலைமை ஆசிரியையாக காந்திமதி பணியாற்றி வருகிறார்.
இவரையும் சேர்ந்து, ஐந்து ஆசிரியர்கள் பணியாற்றி வந்தனர். இந்நிலையில், நடந்து முடிந்த ஆசிரியர் பணியிட மாறுதல் கலந்தாய்வில், நொச்சிப்பட்டியில் பணியாற்றி வந்த, நான்கு ஆசிரியர்கள் பணியிட மாற்றம் பெற்று சென்று விட்டனர். இதனால் தற்போது இந்த பள்ளியில், ஒரு தலைமை ஆசிரியர் மட்டுமே பணியில் உள்ளதால், மாணவ, மாணவியருக்கு பாடம் கற்பிக்க முடியாத நிலை உள்ளது.
இதுகுறித்து அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர், கல்வித்துறை அதிகாரிகளிடம் பல முறை கோரிக்கை வைத்தும், அவர்கள் ஆசிரியர்களை நியமிக்காமல் காலம் தாழத்தி வந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர், நேற்று காலை வகுப்புகளை புறக்கணித்து, பள்ளிக்கு வெளியே போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த ஊத்தங்கரை டி.எஸ்.பி., பாஸ்கரன், இன்ஸ்பெக்டர் பழனிசாமி ஆகியோர், சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். பேச்சுவார்த்தையில், உடனடியாக பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்கா விட்டால், பள்ளியை புறக்கணிப்போம் என, மாணவர்களும், பெற்றோர்களும் உறுதியாக தெரிவித்து விட்டு வீடுகளுக்கு சென்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்தும், கல்வித்துறை அதிகாரிகள் யாரும் சம்பவ இடத்துக்கு வராமல் இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.