Pages

Tuesday, August 16, 2016

மாணவர்களின் தரத்தை மேம்படுத்தவே புதிய கல்விக் கொள்கை: பிரகாஷ் ஜாவடேகர்

மாணவர்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே புதிய கல்விக் கொள்கையை அரசு தயாரித்துள்ளது என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தெரிவித்தார். மாநிலங்களவையில் மத்திய அரசு சார்பில் புதிய கல்விக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கை அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்டது.


அப்போது, இந்தக் கல்விக் கொள்கைக்கு காங்கிரஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தது. ஆர்எஸ்எஸ் அமைப்பின் சித்தாந்தங்களை கல்வித்துறையில் புகுத்த இந்தப் புதிய கொள்கை வழிகோலுவதாகவும் காங்கிரஸ் குற்றம்சாட்டியது.

இந்நிலையில், ஹைதராபாதில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பிரகாஷ் ஜாவடேகர் சனிக்கிழமை பங்கேற்றார். அப்போது அவர் பேசியதாவது:
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையானது தரம், ஆராய்ச்சி, புதிய கண்டுபிடிப்புகள் ஆகியவற்றை மேம்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. ஆனால், இந்தக் கல்விக் கொள்கையானது அரசமைப்புச் சட்டத்துக்கு முரணாக இருப்பதாக சிலர் குற்றம்சாட்டுகின்றனர். அப்படி எந்த அம்சமும் இந்தக் கல்விக் கொள்கையில் இடம்பெறவில்லை.

மாணவர்களின் தரத்தை மேம்படுத்தும் நோக்கத்திலேயே இந்தக் கல்விக் கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்தக் கொள்கை தொடர்பான வரைவு அறிக்கையின் மீதான கருத்துகளையும், ஆலோசனைகளையும் அரசு வரவேற்கிறது என்றார் பிரகாஷ் ஜாவடேகர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.