Pages

Thursday, August 4, 2016

இயக்க குறைபாடுள்ள மாற்றுத்திறனாளி மாணவர்கள் பயன்படுத்த கழிப்பறையுடன் இணைந்த முன்மாதிரி வகுப்பறை: வழிகாட்டியாக திகழும் மதுரை பள்ளி

நாட்டின் மக்கள் தொகையில் 2.2 சதவீதம் மாற்றுத்திறனாளிகள் உள்ளனர். குழந்தைகள் எண்ணிக் கையில் 15 சதவீதம் பேர் இயக்க குறைபாட்டுடன் உள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் குறைந்தபட்ச இயக்கக் குறைபாடுள்ள குழந்தைகள் மட்டுமே, சாதாரண குழந்தைகள் படிக்கும் பள்ளிகளில் படிக்கின்றனர். மூளை பக்கவாதம், தசை சிதைவு நோய் மற்றும் மூளை சம்பந்தப்பட்ட இயக்கக் குறை பாடுள்ள குழந்தைகள், அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளி களில், அவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதியுமின்றி கல்வி கற்க மிகுந்த சிரமப்படுகின்றனர்.


இதற்காகவே, தமிழக அரசு சாதாரண குழந்தைகள் படிக்கும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில், ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் இயக்க குறை பாடுள்ள, இயலா குழந்தைகள் படிக்க, ஒரு ஆதார ஆசிரியர் வகுப்பறை திட்டம் செயல்படுத் தப்படுகிறது.

இந்த ஆசிரியர்கள், இயக்க குறைபாடுள்ள, இயலா குழந்தை களுக்கு, அவர்களுக்கான உப கரணங்களை கொண்டு பாடம் கற்பிக்கின்றனர். ஆனால், இந்த ஆதார வகுப்பறைகளில்கூட இயலா குழந்தைகள் எளிமையாக பயன்படுத்தக்கூடிய மாற்றுத் திறனாளி கழிப்பறை இல்லை. அதனால், இக்குழந்தைகள் கழிப் பறை செல்ல முடியாமல் மிகுந்த சிரமப்படுகின்றனர்.

இந்த இயலா குழந்தைகளுக் காக மதுரை தல்லாகுளம் செங்குந்தர் அரசு உதவிபெறும் உயர்நிலைப் பள்ளியில், பொது மக்கள் உதவியுடன் கட்டிக் கொடுக் கப்பட்ட மாற்றுத்திறனாளி கழிப் பறையுடன் கூடிய முன்மாதிரி வகுப்பறையை இடைநிலை கல்வி உதவி திட்ட ஒருங்கிணைப்பாளர் க.அமுதா நேற்று திறந்து வைத்தார். இக்கழிப்பறையில் கைப்பிடி கம்பிகள், அவர்கள் உயரத்தில் குடிநீர் குழாய்கள் வைக்கப்பட் டுள்ளதால், தற்போது இந்த குழந்தைகள், வீல் சேருடனே கழிப்பறைக்குச் சென்று மற்றவர்கள் துணையில்லாமல் பயன்படுத்தத் தொடங்கியுள்ளனர். இதுபோன்ற முன்மாதிரி கழிப்பறையை இயலா குழந்தைகள் படிக்கும் ஆதார வகுப்பறையில் மட்டுமில்லாது எல்லா அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதுகுறித்து இந்த கழிப்பறை கட்டுவதற்காக பெரும் முயற்சி மேற்கொண்ட மதுரை உளவியல் ஆலோசகரும், சமூக சேவகியுமான ராணி சக்கரவர்த்தி கூறியதாவது;

ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தில் பார்வை, செவித்திறன் அற்ற குழந்தைகளுக்குத்தான் முன்னுரிமை கொடுக்கின்றனர். இயக்க குறைபாடுள்ள குழந்தை கள் சாதாரண பள்ளிகளில் படிப் பதும், மாணவர் சேர்க்கை பெறு வதும் மிகுந்த கடினம். அவர்களால் சாதாரண வகுப்பறையில் அமர்ந்து எழுத முடியாது, வகுப் பறைக்குள் சுதந்திரமாக நடமாட முடியாது, கழிப்பறைக்குச் செல்ல முடியாது. அவர்களுக்கான அடிப்படை வசதிகள் இருக்காது.

குறைந்தபட்சம் வகுப்பறைக் குள் செல்ல சாய்வுதளம்கூட, பல பள்ளிகளில் இருப்பதில்லை. சாதாரண கழிப்பறையை மாற்றுத் திறனாளி மாணவர்களால் பயன்படுத்த முடியாது. பிடித்துக் கொண்டு எழுகிற மாதிரி பிடிமானக் கம்பிகள்கூட இல்லை. இதையெல்லாம் காரணம் காட்டி சாதாரண பள்ளிகளில் இயக்க குறைபாடு குழந்தைகளை சேர்க்க மறுக்கின்றனர். அதனால், நிறைய குழந்தைகள் வீட்டிலேயே இருந்து விடுகின்றனர்.

இது என் மனதை நீண்ட நாட்களாக உறுத்திக் கொண்டு இருந்தது. கழிப்பறை செல்ல சிரமப்படும் இயக்க குறைபாடுள்ள மாணவர்களுக்காக, வகுப்பறை யுடன் இணைந்த மாற்றுத்திற னாளிகள் கழிப்பறை, மதுரை ரோட்டரி சங்கங்கள், இந்திய மருத்துவக் கழகம், கொடையாளர் கள் கொடுத்த உதவியால் ரூ.1.20 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட் டுள்ளது.

கல்வித்துறை, இந்த வகுப் பறையுடன் இணைந்த முன்மாதிரி கழிப்பறையை முன் உதாரணமாக கொண்டு அனைத்து அரசுப் பள்ளிகளிலும் இதுபோன்ற வசதியை ஏற்படுத்த வேண்டும். பொது கழிப்பிட அறைகள், பஸ் நிலையங்களில் மாற்றுத்திறனாளி களுக்காக இதுபோன்ற கழிப்பறை களை கட்டாயம் கட்ட வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.