Pages

Tuesday, August 16, 2016

புதிய சட்டக்கல்லூரி கட்டடங்களுக்கு நிதி ஒதுக்க தமிழக அரசுக்கு உத்தரவு

புதிய சட்டக் கல்லூரிகளுக்கான கட்டடங்களுக்கு, நிதி ஒதுக்குவதற்கான அரசாணையை பிறப்பிக்கும்படி, தமிழக அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.


உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள சட்டக் கல்லூரியில், 2008ல், மாணவர்களுக்கு இடையே பயங்கர மோதல் நடந்தது. இதில், மாணவர்கள் படுகாயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, ஓய்வு பெற்ற நீதிபதி சண்முகம் நியமிக்கப்பட்டார். மாணவர்களுக்கு உள்ள பிரச்னைகள், ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் அடிப்படை வசதிகள் குறித்து, நீதிபதி சண்முகம் குழு ஆராய்ந்தது.

இக்குழு அளித்த பரிந்துரைகளில் முக்கியமாக, உயர் நீதிமன்ற வளாகத்தில் இயங்கும் சட்டக் கல்லூரியை, வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும் என்பதும் ஒன்று. நீதிபதி குழுவின் பரிந்துரைகளை, தமிழக அரசு ஏற்றது. திருவள்ளூர் தாலுகாவில் உள்ள பட்டரை, திருப்பரங்குன்றம் தாலுகாவில் உள்ள புதுபாக்கம் கிராமங்களை, சட்டக் கல்லூரிகளுக்கான இடங்களாக, தமிழக அரசு அடையாளம் கண்டது. இதற்கு, சட்டக் கல்வி துறையும் அனுமதி
வழங்கியது.

இரு இடங்களிலும், சட்டக் கல்லூரிகளுக்கான புதிய கட்டடங்கள் கட்ட, 104.50 கோடி ரூபாய் மதிப்பீடு தயார் செய்யப்பட்டு, 2015, ஜூனில், அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. பின், 2016, ஜூலையில், 117.30 கோடிக்கு, திருத்திய மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டது. சட்டக் கல்லூரிகள் இடமாற்றம் தொடர்பான வழக்கு, தலைமை நீதிபதி எஸ்.கே.கவுல், நீதிபதி மகாதேவன் அடங்கிய, முதல் பெஞ்ச் முன், விசாரணைக்கு வந்தது.

அரசு தரப்பில், அரசு பிளீடர் எம்.கே.சுப்ரமணியன் ஆஜரானார். முதல் பெஞ்ச் பிறப்பித்த உத்தரவு:
சட்டப் படிப்புகளுக்கான இயக்குனர் தாக்கல் செய்த மனுவில், 117.30 கோடி ரூபாயில், திருத்திய மதிப்பீடு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு, பொதுப்பணித் துறை மற்றும் நிதித் துறை ஒப்புதல் அளித்து உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. இதற்கான அரசாணைக்கு காத்திருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டது.

அரசாணை பிறப்பிக்க, மூன்று வாரங்கள் அவகாசம் அளிக்க, அரசு பிளீடர் கேட்டுக் கொண்டார். எனவே, அடுத்த விசாரணையின் போது, எங்கள் முன் அரசாணை இருப்பதை, உறுதி செய்ய வேண்டும். விசாரணை, செப்., 9க்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.