“இதுவரை அனைத்து அரசு தேர்வுகளும் எழுதிப் பார்த்துவிட்டேன். எவ்வளவோ முயற்சி செய்தும் எனக்கு வேலை கிடைக்கல! ஆனால், நேத்து டிகிரி முடிச்சுவன், இன்னைக்கு வேலைக்கு போயிட்டான். எல்லாம் அதிர்ஷ்டம் சார்!” என பலர் அலுத்துக் கொள்வதை காண்கிறோம்.
முயற்சி என்பது பலமுறை போட்டியில் கலந்து கொள்வது அன்று! முயற்சி தகுந்த பயிற்சியுடன் அமைய வேண்டும். முறையான பயிற்சியே கை மேல் பலன் தரும். முயற்சி என்பது வெற்றிக்கான திரி. அதில் பயிற்சி என்னும் எண்ணெய்யை ஊற்றி எரிய விட்டால் மட்டுமே, பிரகாசமாக கொழுந்து விட்டு அணையாமல் எரியும்!
முறையான பயிற்சி, பிறரை சார்ந்து வாழாமல், நம்மை நம்பி வாழ உதவிபுரியும்; தன்னம்பிக்கையை வலுப்படுத்தும். நாம் எடுத்து கொண்ட செயலில் தீவிரத்தை உண்டாக்கும். செயல் தீவிரமாகும் போது நம்மிடம் பொதிந்துள்ள முழு ஆற்றலும் வெளிப்படும்.
சச்சின் டெண்டுல்கர் சிறந்த கிரிக்கெட் வீரராக உருவானதற்கு காரணம், அவர் தினமும் ஐந்து மணி நேரம் பயிற்சி மேற்கொண்டதே! அதனால் தான் அவரால் எந்த திசையில் பந்து வந்தாலும் அதனை ‘பவுண்டரி’க்கு அனுப்ப முடிந்தது. உலக சாதனைகள் பல நிகழ்த்த முடிந்தது!
சாதனைகளை நிகழ்த்துவதற்கு மட்டுமின்றி, குறைகளை களைவதற்கும் பயிற்சி அவசியம். பயிற்சி நமக்கு புதிய விசயங்களை கற்று தரும். திரும்ப திரும்ப ஒரு விசயத்தை செய்யும் போது, நம்மிடம் உள்ள உண்மையான ஆற்றல் வெளிப்படும். தவறுகள் திருத்தப்படும். தவறுகள் குறைக்கப்படும் போது வெற்றி தானாக கனிய ஆரம்பித்துவிடும்!
முன்னாள் ஜனாதிபதி டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் கூட, அவரது ஆராய்ச்சிகளில் பலமுறை தோல்வியை சந்தித்துள்ளார். பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளார். திரும்ப திரும்ப பயிற்சி செய்ததால், முன்பு செய்த தவறுகள் சரி செய்யப்பட்டு, அவரது சிறந்த ஆற்றல் வெளிப்பட்டு பல வெற்றிகளை குவித்தார். அதன் விளைவே, பிரித்வி மற்றும் அக்னி.
‘பயிற்சி தான் உங்களின் தலைசிறந்த ஆசிரியர்’ என்று ஒரு ஸ்பானிஷ் பழமொழி கூட உண்டு. பத்தாம் மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் மாநில முதல் மதிப்பெண் எடுத்த மாணவச் செல்வங்களிடம் கேட்டால், “முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களை மிகவும் கவனத்துடன் தொடர்ந்து பயிற்சி செய்தேன். வீட்டிலேயே பலமுறை தேர்வு எழுதி எழுதிப் பார்த்தேன். அதுவே மற்றவர்களை விட சிறந்த மதிப்பெண் பெற்று தந்தது”, என்பார்கள்.
வெற்றிக்கு எளிய வழியும் பயிற்சி தான்! ஒரு சிறந்த ஆசிரியர் கற்று தருவதை விட, பயிற்சி கூடுதலாக கற்று கொடுக்கும். நம் பலவீனங்களை பலப்படுத்த உதவும். பலவீனங்கள் குறையும் போது நாம் எதிர்கொள்ளும் சவால்கள் தானாக விலகி ஓடும். வெற்றி நம் வசப்படும்!
க.சரவணன், மதுரை.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.