Pages

Friday, August 19, 2016

தலைமை ஆசிரியை, 2 ஆசிரியர்கள் இடை நீக்கம்

பணியில் ஒழுங்கீனமாக இருந்ததாக எழுந்த புகாரையடுத்து ஒரு தலைமை ஆசிரியை, 2 ஆசிரியர்களை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டுள்ளார். போளூரை அடுத்த துரிஞ்சிகுப்பம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி இயங்கி வருகிறது. பள்ளித் தலைமை ஆசிரியையாக வளர்மதி (50) பணிபுரிந்து வருகிறார். இந்தப் பள்ளியில் சுதந்திர தினவிழா கொண்டாட மாணவர்கள், பெற்றோர்கள் கடந்த திங்கள்கிழமை காலை 9 மணி முதல் காத்திருந்தனர்.


தலைமை ஆசிரியை வளர்மதி காலை 11.30 மணிக்கு வந்து தேசியக்கொடி ஏற்ற முயன்றார். இதைக் கவனித்த ஊர் பொதுமக்கள் அவரை தடுத்து நிறுத்திப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் விசாரணை நடத்தினர். இதையடுத்து, உயர் அதிகாரிகளின் ஆலோசனையின்படி வளர்மதியை பணியிடை நீக்கம் செய்து மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன் உத்தரவிட்டார்.

2 ஆசிரியர்கள் பணியிடை நீக்கம்: கீழ்பென்னாத்தூரை அடுத்த கருமாரப்பட்டி கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி இயங்கி வருகிறது. இந்தப் பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் கருணாநிதி, இடைநிலை ஆசிரியர் பாண்டியன் ஆகியோர் அவ்வப்போது மது அருந்திவிட்டு போதையில் பள்ளிக்கு வருவதாக புகார் எழுந்தது.

இதேபோல், ஆசிரியர்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை மது அருந்திய நிலையில் வகுப்புகளுக்கு வந்தனராம். தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் பள்ளிக்கு பூட்டுப்போட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து விசாரணை மேற்கொண்ட மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் ராஜேந்திரன், இருவரையும் பணியிடை நீக்கம் செய்து புதன்கிழமை உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.