Pages

Wednesday, July 6, 2016

வங்கி, ஏடிஎம்களில் பணம் எடுக்கும்போது கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு அம்சங்கள்: காவல்துறை அறிவுறுத்தல்கள்

சென்னை பட்டினப்பாக்கத்தில் நேற்று இரவு வங்கி ஏடிஎம்மில் பணம் எடுத்து வாகனத்தில் வீடு திரும்பிய நந்தினி, நஜ்ஜு ஆகியோரிடம் இருந்து பணப்பையை கொள்ளையன் பறிக்க முயன்றான். இதில், வாகனத்தில் இருந்து விழுந்த நந்தினி உயிரிழந்தார். சாலையில் சென்ற முதியவர் ஒருவரும் உயிரிழந்தார்.


ஆயிரக்கணக்கான ஏடிஎம்கள், தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்களை நிறுவியுள்ள வங்கிகள், பணம் எடுத்துச் செல்லும் வாடிக்கையாளர்களுக்கு சில அறிவுறுத்தல்களை வழங்குகிறது. வங்கிக்கு உள்ளே வருபவர்கள், வெளியில் நிற்பவர்களை கண்காணிக்க கேமரா பொருத்தப்பட்டுள்ளது. எனவே, ஹெல்மெட், தொப்பி அணிந்து வரவேண்டாம். பணம் எடுக்கும்போது, மற்றவர்கள் கவனிக்காத வகையில் ரகசிய எண்ணை பதிவு செய்ய வேண்டும் என்று வங்கிகள் அறிவுறுத்துகின்றன.

இதுதொடர்பாக காவல்துறையும் சில அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. அதுபற்றிய விவரம்:

* வங்கி, ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதை சிலர் நோட்டமிடலாம். அதிக தொகை எடுக்கும்போது, அடுத்தவர் கவனத்தை ஈர்க்கும் வகையில் எண்ணுவது, அடுக்குவது கூடாது. வங்கி அல்லது ஏடிஎம் மையத்துக்குள்ளேயே எண்ணி முடித்து, பையில் வைத்துக்கொண்டு வெளியே வரவேண்டும். வெளியே வந்து எண்ணுவது, சரிபார்ப்பது கூடாது.

* வங்கியில் இருந்து வெளியே வரும்போது யாராவது பின்தொடர்கின்றனரா என்று கண்காணிக்க வேண்டும். பின்தொடர்வதாக சந்தேகித்தால் காவல் துறையினரை அணுகலாம்.

* சந்தேகிக்கும் நபர்கள் வங்கி அல்லது ஏடிஎம் மையங்களுக்கு வெளியே நிற்பதாக அறிந்தால், அந்த மையங்களில் இருக்கும் காவல்துறை தொடர்பு எண்ணில் தகவல் அளிக்கலாம்.

* சில நேரம், நீங்கள் பணத்தை எடுத்துச் செல்லும்போதோ, வாகனத்தில் ஏறும்போதோ, உங்கள் சட்டையில் அசிங்கம் பட்டிருப்பதாக யாராவது கூறலாம். ரூபாய் நோட்டுகள் கீழே கிடப்பதாக கூறலாம். அவர்கள் உங்கள் கவனத்தை திசைதிருப்பி, பணப்பையை பறித்துச் செல்ல வாய்ப்பு உள்ளது. எச்சரிக்கை தேவை.

* பணத்தை கைப்பையில் போட்டு கையில் தொங்கவிட்டு செல்வது, வாகனத்தின் முன்பக்க பையில் வைப்பதை தவிர்க்க வேண்டும். பணத்தை பாதுகாப்பாக கொண்டு செல்ல வேண்டும்.

* இரவு நேரத்தில், ஆள் நடமாட்டம் இல்லாத இடங்களில், பாதுகாவலர் இல்லாத ஏடிஎம் மையங்களில் பணம் எடுப்பதை பெரும்பாலும் தவிர்க்கலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.