Pages

Wednesday, July 6, 2016

உடற்கல்வி ஆசிரியர், இயக்குநர் பணியிடங்களை நிரப்பக் கோரிக்கை

தமிழகத்தில் காலியாக இருக்கும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என திருநெல்வேலியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற உடற்கல்வி ஆசிரியர்கள், இயக்குநர்கள் சங்கக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.


தமிழ்நாடு உடற்கல்வி ஆசிரியர், இயக்குநர்கள் சங்க மாவட்டக் கிளை நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் மாநிலத் தலைவர் டி. ரவிசங்கர் தலைமையில் நடைபெற்றது.


மாநில பொதுச் செயலர் டி. தேவிசெல்வம், மாநிலப் பொருளாளர் வி. பெரியதுரை, தலைமை நிலையச் செயலர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில இணைச் செயலர் எம். கார்த்திக்குமார் வரவேற்றார்.

கூட்டத்தில், தொழிலதிபர் ஆர்.ஆர். திருபொன்ராஜ், விவேகானந்தா வித்யாஷ்ரம் மெட்ரிக் பள்ளித் தாளாளர் எஸ். திருமாறன், மாவட்ட விளையாட்டு அலுவலர் க. சேவியர்ஜோதி சற்குணம், மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் ஆர். ரமேஷ்ராஜா, மாவட்ட மகளிரணிச் செயலர் எஸ். மரியடெல்சியாமதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

தீர்மானங்கள்: தமிழகத்தில் உடற்கல்வி ஆசிரியர், இயக்குநர் நிலை 2 பதவி உயர்வு பெறும் வகையில் 89 பணியிடங்களை அதிகரிக்க வேண்டும்; உடற்கல்வி பாடத் திட்டத்திற்கும் விலையில்லாப் புத்தகம் வழங்க வேண்டும்; தமிழகத்திலுள்ள 7589 உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் 100 மாணவர்களுக்கு ஒரு உடற்கல்வி இயக்குநர் என்ற அளவிலும், 3566 மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை உடற்கல்வி இயக்குநர் நிலை 1 என்ற அளவிலும் பணியிடங்கள் உருவாக்க வேண்டும்; 5677 உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களை தரம் உயர்த்த வேண்டும்;

அரசுப் பள்ளிகளில் விளையாட்டுத் துறையில் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் ஒரு பள்ளிக்கு  ரூ. 50 ஆயிரம் கல்வி நிதி வழங்க வேண்டும்; தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் உடற்கல்வி ஆய்வாளர் நிரந்தரப் பணியிடங்களை நிரப்ப வேண்டும்.

38,468 தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் கல்வித் தகுதிக்கு ஏற்ப புதிய பணியிடம் உருவாக்க வேண்டும்; காலியாக இருக்கும் உடற்கல்வி ஆசிரியர், இயக்குநர் பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. மாவட்டத் தலைவர் எம். சாமுவேல் எடிசன்பிரபு நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.